(இரோஷா வேலு)

கொழும்பு மாநகர சபைக்குள் பல பிரதேசங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் வீதியெங்கும் வீசப்பட்டு, துர்நாற்றம் வீசுவதினால் பல அசெளகரியங்களுக்கு முகங்கொடு வேண்டியுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

கொழும்பு நகர பகுதியில் மட்டக்குளி, மோதர, தெமட்டகொட, ஜெம்பட்டா வீதி, மாளிகாவத்தை, மருதானை, வெள்ளவத்தை போன்ற பிரதேசங்களிலும் வத்தளை பகுதிகளிலும் பல நாட்களாக குப்பைக்கூளங்கள் அகற்றப்படாமல் காணப்படுவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

சில நேரங்களில் குப்பை கூளங்களை அகற்றவரும் பணியாளர்கள் உரிய நேரத்தில் வருவதில்லையென தெரிவிக்கும் பொதுமக்கள் அவ்வாறு வரும் வேளையில் பொது மக்களுக்குடன் முரண்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். 

மேலும் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினால் மழை நீர் குப்பைக்கூளங்களில் காணப்படும் பொலித்தீன் பைகளில் நீர் தேங்கி நின்று மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளதாகவும் பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அது மாத்திரமன்றி   கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டு குடியிருப்புகளுக்குள்  கழிவு நீர் உட்புகுந்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். 

எனவே இவ்விடயம் குறித்து உரிய அதிகாரிகளிடம் வினவிய போது அவர்கள் தெரிவித்ததாவது,

கடந்த காலங்களில் குப்பைகளை தரம்பிரித்து அகற்றுமாறு அரசினாலும் மாநகர சபைகளினாலும் ஊடகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வாயிலாக பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. 

அந்த அறிவித்தலின் படி சில காலம் பொது மக்கள் அதனை  கடைப்பிடித்திருந்தனர். ஆயினும் கடந்த சில நாட்களாக மீண்டும் பொது மக்கள் உரிய வகையில் குப்பைகளை தரம் பிரித்து போடாமையினால் குப்பை அகற்றும் பணிகளின் போது சிரமம் காணப்படுவதாக ஊழியர்கள் முறைப்பாடு தெரிவிக்கின்றனர். 

இதன் காரணமாக சில பகுதிகளில் பொது மக்களுக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்குமிடையில் சில முரண்பாடுகள் தோன்றி மறைந்துள்ளன. அவற்றுடன் பொது மக்கள் நள்ளிரவு நேரங்களில் கழிவுப் பொருட்களை வீதியோரங்களில் வீசி விட்டு செல்கின்றனர். 

இதன் காரணமாகவே வீதியெங்கும் குப்பை அகற்றப்படாமல் காலை நேரங்களில் பிரதேசவாசிகள் இவ்வாறான ஓர் சூழலுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. 

எனினும் மதியத்திற்கு முன்பாக அவ்வாறான பகுதிகளிலும் குப்பைகள் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. விரைவில் இதற்கான முழுமையான தீர்வொன்று எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.  

இருப்பினும் இவ்வாறு குப்பை கூளங்களை வீதிகளில் மற்றும் பொது இடங்களில் வீசுவோருக்கு எதிராக அதிகாரிகள் சட்டநடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.