கருந்துளை மற்றும் வெப்ப இயக்கவியல் தொடர்பான ஆய்வுகளால் பிரபலமானவரும், பிரித்தானிய இயற்பியலாளருமான ஸ்டீபன் ஹோக்கிங் உயிரிழந்துள்ளார்.    

இங்கிலாந்து கேம்பிறிட்ஜில் அமைந்துள்ள அவருடைய வீட்டில் இன்று  அதிகாலை உயிரிழந்ததாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

21 வயதில் அமையோட்ரோபிக் லட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis) என்னும் நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட ஸ்டீபன் ஹோக்கிங் கை, கல்கள் மற்றும் உடல் அவயவங்கள் இயக்கமற்று பேச்சுத்திறனையும் இழந்தார்.

இந்நிலையில் சக்கர நாற்காலியே அவருடைய இருப்பிடம் ஆகியது. ஸ்டீபன் ஹோக்கிங் சில ஆண்டுகள் மாத்திரமே உயிருடன் இருப்பார் என்று வைத்தியர்கள்  கூறியிருந்தனர்.

எனினும் இயற்பியல் ஆராய்ச்சிகள், எழுத்துத்துறை மற்றும் பொதுவாழ்வில் அதிக ஈடுபாட்டினை கொண்ட ஸ்டீபன் ஹோக்கிங் பல சாதனை கண்டுபிடிப்புக்களை அதன்பின்னரே நிகழ்த்திக் காட்டினார்.

அண்டவியலும் குவாண்டம் ஈர்ப்பும் இவருடைய முக்கியமான ஆய்வுத்துறைகள் ஆகும். அதுமட்டுமின்றி, கருந்துளைகள், வெப்ப இயக்கவியலுக்கான தொடர்புகள் குறித்த இவருடைய கட்டுரைகள் ஆராய்ச்சி துறையில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது.

கருந்துளையிலிருந்து ஒளி உட்பட எதுவுமே வெளியேறமுடியாது என்ற கருத்துக்கு மாறாக கருந்துளைகள் துணிக்கைகளை வெளியேறுகின்றன என்றும் அதன்மூலம் காலப்போக்கில் இல்லாமல் போய்விடுகின்றன என்றும் 1974ஆம் ஆண்டு கதிர்வீச்சு கோட்பாட்டை கோடிட்டு காட்டினார்.

இவருடைய மறைவு விஞ்ஞான விந்தை உலகில் பெரும் இழப்பாக அமைந்துள்ளது