(இரோஷா வேலு)

மனைவியின் கள்ளக்காதலன் என்ற சந்தேகத்தால் இளைஞர் ஒருவர் மீது ஏனமுல்ல ரந்தி உயன பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு கத்தியால் குத்திவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக மோதரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் சுஜீவ தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மோதரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏனமுல்ல ரந்தி உயன பிரதேசத்தில் வைத்து முச்சக்கர வண்டியில் வந்த சந்தேகநபர் ஒருவர் குறித்த இளைஞன் மீது கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். 

இதன்போது தாக்குதலுக்கு இலக்கான குறித்த இளைஞர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு உடனடியாக எடுத்துச்செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு மரணித்தவர் கொட்டாஞ்சேனை வாசல வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஆணொருவரேயாவர். முச்சக்கர வண்டியில் வந்த சந்தேகநபர் குறித்த நபர் வீதியில் நடந்து கொண்டிருந்த சந்தர்பத்தில் அவரது இடது பக்க மார்பக பகுதியிலேயே கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார். 

இதன்பின்னரே குறித்த சம்பவம் தொடர்பில் மோதர பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த கொலைச் சம்பவம் தொடர்பான சந்தேகநபர் யார் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. 

இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த சம்பவமானது தனது மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தினால் பலிவாங்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் என்பது தெரியவந்துள்ளது.

எனவே பொலிஸாரினால் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் கிராண்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த தற்போது ஏனமுல்லை பகுதியில் வசித்து வந்தவர்  என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.