இலங்கை அணிக்கு எதிரான சுதந்திரக் கிண்ணத் தொடரின் 4 ஆவது போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளைப் பெற்று முன்னிலை பெற்றது.

பங்களாதேஷ், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் சுதந்திரக் கிண்ண முக்கோணத் தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன.

சுதந்திரக்கிண்ணத் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதும் 4ஆவது  முக்கிய போட்டி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது.

இத்தொடரில் 3 அணிகளுமே 2 போட்டிகளில் விளையாடிய நிலையில் 3 அணிகளும் தலா 2 புள்ளிகளைப்பெற்றுள்ளன.

இருப்பினும் புள்ளிப்பட்டியலில் ஓட்டசராசரியில் இலங்கை அணி முதலிடத்திலும் இந்திய அணி 2 ஆவது இடத்திலும் பங்களாதேஷ் அணி 3 ஆவது இடத்திலும் உள்ளன.

இந்நிலையில் இன்றைய முக்கிய போட்டியில் இந்திய மற்றும் இலங்கை அணிகள் ஒன்றையொன்று சந்தித்தன.

இன்றைய போட்டியில் மழை குறுக்கிடுவதற்கான வாய்ப்புக்கள் இருந்ததால் போட்டி தாமதமாகியே ஆரம்பித்தது.

இதனால் போட்டி 19 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது.

குசல் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 55 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். தரங்க 22 ஓட்டங்களையும் சானக்க 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் தாகூர் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளையும் வொஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

153 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இந்திய அணி சார்பாக துடுப்பாட்டத்தில் பாண்டியா  ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களையும் டினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.