( எம்.எப்.எம்.பஸீர்)

 பாணந்துறை - அலுபோமுல்ல பகுதியில் வீடொன்றில் இருந்து விமானங்களின் பாகங்கள் பலவற்றை பொலிஸார் இன்று நண்பகல் கைப்பற்றியுள்ளனர். 

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைவாக குறித்த வீட்டை சுர்றிவளைத்த போது இந்த விமான பாகங்களைக் கைப்பற்றியதாகவும் விமானத்தின் இயந்திரத்தினை தவிர பெரும்பாலும் ஏனைய அனைத்து பாகங்களும் அங்கு இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 எவ்வாறாயினும் இந்த விமான பாகங்கள் அனைத்தும் பாவனையின் பின்னர் ஒதுக்கப்பட்ட விமானங்களில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளது.

 குறித்த வீட்டின் உரிமையாளர் ஓய்வுபெற்ற விமானப்படை வீரர் என்பதும் அவர் சேவைக் காலத்தின் போது விமான நிறுவனங்களில் தொழில் நுட்பவியலாளராக பணியாற்றியுள்ளமையும், அப்போதே அகற்றப்படும் மேற்படி விமான பாகங்களை அவர் வீட்டில் சேகரித்துள்ளமையும்  பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 கடந்த 18 வருடங்களாக இவ்வாறு சேகரிக்கப்பட்ட விமான பாகங்களை அவர் பயிலுனர் விமானிகள் தொடர்பில் இடம்பெறும் கருத்தரங்குகள் கல்வி நடவடிக்கைகளை இலக்காகக் கொண்டு விற்பனை செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

 எவ்வாறாயினும் விமான பாகங்கள் மீட்கப்பட்ட விவகாரத்தில் இன்னும் எவரும் கைது செய்யப்படாத நிலையில், பாவனையில் இருந்து அகற்றப்படும் விமான பாகங்களை இவ்வாறு வைத்திருக்க முடியுமா என முதலில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.