சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் தவறாக ஆருடம் கூறிய ஜோதிட நிலையத்தை இடித்து தரை மட்டமாக்கி உள்ளார்.

சீனாவில் சிசுவான் மாகாணம் மியான்யங் பகுதியை சேர்ந்த 70 வயதான  வாங் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அங்குள்ள ஜோதிடரை சந்தித்துள்ளார்.

அப்போது வாங் 2018ஆம் ஆண்டை பார்க்கமாட்டார் அதற்குள் இறந்து விடுவார் என ஆரூடம் கூறியுள்ளார் ஜோதிடர். அதை உண்மை என நம்பிய வாங் ஒவ்வொரு நாளையும் மரண பயத்துடன் கழித்துள்ளார்.

ஆனால் அவர் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்கிறார். இந் நிலையில் கடந்த வாரம் ஜோதிடர் நிலையத்துக்கு வாங் சென்றுள்ளார்.

ஜோதிடரை சந்தித்து வாங் ஆரூடம் பொய் என வாக்குவாதம் செய்ததோடு ஆத்திரத்தில் ஜோதிட நிலையத்தை இடித்து தரை மட்டமாக்கி உள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார்  விசாரணை நடத்தி, தவறாக ஆரூடம் சொல்லி வாங் மனதை நோகடித்ததற்காக அவரிடம் ஜோதிடரை மன்னிப்பு கேட்க வைத்தனர்.

சீனாவில் ஜோதிடம் பிரசித்தி பெற்ற கலையாக திகழ்கிறது. ஒருவரின் பெயர், பிறந்த திகதி, நேரம், முக அடையாளம், உள்ளங் கைகளை பார்த்து ஜோதிடம் சொல்வதில் ஜோதிடர்கள் வல்லவர்களாக திகழ்கின்றனர்.