ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை 8.40 மணியளவில் இந்தியா மற்றும் ஜப்பானுக்கான பயணத்தை ஆரம்பித்தார்.

இந்தியாவின் புதுடில்லியில் மார்ச் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகும் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  இந்தியா பயணமானார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் ஆகியோரின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி இம் மாநாட்டில் கலந்துகொள்கிறார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் தலைமையில் இடம்பெறும் இம் மாநாட்டில் பல்வேறு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 500 பிரதிநிதிகள் பங்குபற்றவுள்ளனர்.

2015ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் திகதி பரிஸ் நகரில் இடம்பெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்புக்கான அடித்தளம் இடப்பட்டது. 

121 நாடுகள் அங்கத்துவம் வகிக்கும் இக்கூட்டமைப்பில் ஆரம்ப உறுப்பு நாடாக இலங்கையும் பங்குபற்றுவது குறிப்பிடத்தக்கது.

மின்சக்தி தேவையை நிறைவேற்றுவதற்கு சூரியசக்தி தொடர்பான தொழில்நுட்பத்தை துரிதப்படுத்தி விரிவுபடுத்துதல், சூரியசக்தி திட்டங்களுக்கான செலவுகளை குறைத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான பொதுத் தளம் ஒன்றை உருவாக்குவதற்கு இம்மாநாட்டின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின்போது இந்திய பிரதமர், இந்திய ஜனாதிபதி மற்றும் மாநாட்டில் கலந்துகொண்டு சில அரச தலைவர்களுடனும் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை ஜப்பானுக்கான பயணத்தை மேற்கொள்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

ஜப்பானிய பிரதமர் சின்சோ அபேயின் அழைப்பின் பேரிலேயே ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொள்கிறார்  ஜனாதிபதி. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் 10 பேரடங்கிய குழுவினரும் இவ் விஜயத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.