வவுனியா பொதுவைத்தியசாலையில் பிறந்த குழந்தையொன்றை இன்று முற்பகல் 11 மணியளவில் மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 

வவுனிய வைத்தியசாலையில் இன்று முற்பகல் 11 மணியளவில் 5 ஆம் இலக்க விடுதில் கடந்த 7 ஆம் திகதி இரவு பிறந்த ஆண் குழந்தை ஒன்றினை இன்று வைத்தியசாலை விடுதியில் தனக்குப் பக்கத்தில் நின்றிருந்த இளம் கர்ப்பிணி பெண் ஒருவரிடம் கொடுத்துவிட்டு குழந்தையின் தாயார் குளியலறைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை வழங்கிய நபரையும் தனது குழந்தையையும் காணவில்லை என்று வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் தாயார் ஒருவரால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

குறித்த குழந்தையின் தாயார் பொகஸ்வெவே பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என்பதுடன் திருடப்பட்ட குழந்தை அவரின்  4 ஆவது ஆண் குழந்தை என்பதும் இன்று அவரை வீடு செல்வதற்கு வைத்தியர்கள் அனுமதித்துள்ளனர்.

இதன்போதே குழந்தையை திருடிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இதையடுத்து வைத்தியசாலையில் பொருத்தப்பட்ட சி.சி.ரி கமெராவின் உதவியுடன் குழந்தையைத் திருடியவரை தேடும் நடவடிக்கை நடைபெற்று வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தனிப்பட்ட நபரின் செயற்பாடா அல்லது வேறு தேவைகளுக்காக குழந்தை கடத்தப்பட்டதா போன்ற கோணத்தில் விசாரணைகளை வைத்தியசாலைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.