பப்புவா நியூ கினியா தீவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்ற நிலையில் அதன் தொடர்ச்சியாக, இன்று அதிகாலையில் மீண்டும் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ரபவுல் நகரில் இருந்து சுமார் 135 கிலோ மீற்றர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 10 கிலோ மீற்றர் ஆழத்திலும் சுமார் 7.1 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் அப்பகுதி மக்கள் வீதியோரங்களில் தஞ்சமடைந்தனர். ஆனாலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் குறித்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இதேவேளை, கடந்த 26 ஆம் திகதி பப்புவா நியூ கினியா தீவில் 7.5 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.