வீட்டு சாவியை பெண்களிடம் கொடுக்கும் போது நாட்டை ஏன் கொடுக்க தயங்க வேண்டும் என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை கேளம்பாக்கம் அருகேயுள்ள காலவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுடன் நடிகர் கமல்ஹாசன் கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்கள் மத்தியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:-

அரசியல் என்பது உங்கள் வாழ்வை மாற்றியமைக்கும் சக்தியாக உள்ளது. அரசியலை கண்காணிக்க வேண்டும். பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. நான் பள்ளிப்படிப்பை கூட தாண்டவில்லை. பள்ளிப்படிப்பை தாண்டாத என்னை கலைதான் காப்பாற்றியது.

மாற்றத்தை ஏற்படுத்தவே அரசியலுக்கு நான் வந்துள்ளேன். மக்களாட்சி மலர வேண்டும் என்றால் மாணவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

வீட்டு சாவியை பெண்களிடம் கொடுக்கும் போது நாட்டை ஏன் கொடுக்க தயங்க வேண்டும். மய்யம் என்பது நடுவில் இருந்து பார்த்து நேர்மையாக எடுக்கும் முடிவு. எந்த ஒன்றையும் நடுவில் இருந்து பார்த்தால் மட்டுமே அனைத்தும் விளங்கும். மய்யம் என்பது தராசின் நடுவில் உள்ள முள் போன்றது.