(ரொபட் அன்டனி)

திகன, தெல்தெனிய  உள்ளிட்ட கண்டி மாவட்டத்தில்  வெளிமாவட்டங்களிலிருந்து வந்த  அரசியல்  சார்ந்த குழுவினர்  திட்டமிட்ட ரீதியில்   மேற்கொண்ட சதிநடவடிக்கையினாலேயே  அசம்பாவிதங்கள் இடம்பெற்றன.  இதுதொடர்பில் பாதுகாப்புத்துறை முழுமையாக விசாரணை நடத்தி ஆதாரங்களைத் திரட்டி வருகின்றது. விரைவில் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்ற அரசியல் சார்ந்த அந்த சூத்திரதாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று   அரசாங்கம்  அறிவித்திருக்கின்றது.

நாட்டின் அரசியலமைப்பின் ஊடாக சகல பிரஜைகளினதும் உரிமை  பாதுகாக்கப்பட்டுள்ளது.  அதனை   யாரும்  மீறமுடியாது.   அந்தவகையில்   பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியமாகும்.     இந்த அரசியல் சதியின் பின்னணியில் இருப்பவர்கள்  தொடர்பான தகவல்களை   விரைவில்  வெளியிடுவோம் என்றும்  அரசாங்கம்  குறிப்பிட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள   தற்போதைய அசாதாரண சூழல் தொடர்பில்   அரசாங்கத்  தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்   கலந்துகொண்ட   அமைச்சர்களான ராஜித சேனாரட்ன,  சரத் அமுனுகம, மற்றும்   கபிர்  ஹசீம் ஆகியோர் இந்த விடயங்களை அறிவித்தனர்.

இந்த செய்தியாளர் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில்   அமைச்சர் சரத் அமுனுகம  குறிப்பிடுகையில்;

நாட்டில்  ஏற்பட்டுள்ள  இந்த அசம்பாவிதங்களுக்கு மத்தியில் அரசியல் கட்சிகளும்  ஊடகங்களும்   பொதுமக்களும்   பொறுப்புடன் செயற்பட்டு வருவதை காண முடிகின்றது. அனைத்துத்தரப்பினரும் இனவாதத்தை நிராகரிக்கின்றனர்.  நாட்டில் அரசியலமைப்பே பிரதான சட்டமாக இருக்கின்றது. அந்த  அரசியலமைப்பு சட்டத்தை யாம் மீற முடியாது.   மக்களின் உயிர்களுக்கோ, சொத்துக்களுக்கோ யாரும் சேதம் ஏற்படுத்த முடியாது. அவற்றைப் பாதுகாக்கும்  உரிமை அனைவருக்கும் உள்ளது.  எனவே அரசியலமைப்பு ரீதியாக  நாட்டை   கொண்டுசெல்ல வேண்டும்.

அதனை  நடைமுறைப்படுத்தவேண்டிய பொறுப்பு பாதுகாப்புத் தரப்பிற்கும் இருக்கின்றது. ஒருபோதும் இனவாத செயற்பாடுகளை ஊக்குவிக்கக்கூடாது.

 

வெளிமாவட்டங்களிலிருந்து வந்த அரசியல் நிகழ்ச்சி நிரல்களைக்கொண்ட சதிகாரர்கள்  ஆத்திரமூட்டும் வகையில் செயல்பட்டு அப்பிரதேசத்தில் மோதல் நிலையை ஏற்படுத்தினர். திட்டமிட்டு  இந்த அரசியல்சதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதுகாப்பு தரப்பினர் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்தனர்.  இருந்தாலும் இந்த அரசியல் சதிகாரர்கள்   சதி திட்டத்தை முன்னெடுத்தனர்.  இதில்  அரசியல்  ஆதரவாளர்கள்  ஓய்வுபெற்ற பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது பாதுகாப்பு  சேவையில் இருக்கின்ற ஒருவர் என பலர்     நிரூபனமாகியிருக்கின்றனர். திட்டமிடப்பட்டு இந்த சதி அரங்கேற்றப்பட்டுள்ளது.  இங்கு  சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டியது அவசியமாகும். இது தொடர்பில் ஜனாதிபதியும், பிரதமரும் நாட்டுமக்களுக்கு  அறிவிப்புக்களை விடுத்துள்ளனர்.

இந்த சதித்திட்டங்கள் எவ்வாறு  அரங்கேற்றப்பட்டன என்று மக்களுக்கும் தெரியும்.   சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறு இனவாதங்களை பரப்பி வருகின்றனர்.  விசாரணை  துரிதகதியில்   முன்னெடுக்கப்படுகின்றது.  விரைவில்  சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் கொண்டுவருவோம்.  நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அவசரகால  நிலையின் கீழ்    இராணுவத்தினர்  களமிறக்கப்பட்டு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பிரச்சினையை  நீடிக்க இடமளிக்கமாட்டோம். சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவோம்.    மக்களின் உரிமை அரசாங்கம் பாதுகாக்கும் கண்டியில்   சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் சிறந்த உறவு காணப்படுகின்றது.  வெளிமாவட்டங்களிலிருந்து வந்தவர்களே துரோகிககள் ஒருசிலர்  தவறு   செய்கின்றனர் என்பதற்காக ஒரு  சமூகத்தை குறை கூறுவது சரியல்ல. இது தொடர்பில்  மக்கள் சிந்தித்து செயற்படவேண்டும்  என்றார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலர் அமைச்சர் கபீர் ஹசீம் குறிப்பிடுகையில்:

இனவாதக்குழுக்கள்  அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய சதி செய்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.  இதன்மூலம் நாட்டைக் குழப்புவதற்கு முயற்சிக்கப்படுகின்றது. அவை தற்போது  நிரூபணமாகியுள்ளது.   குறித்த நான்கு   இளைஞர்களின் செயற்பாட்டை அனைத்து முஸ்லிம்களும் கண்டிக்கின்றனர். ஆனால் நிலைமை இவ்வாறிருக்கையில் வேண்டுமென்றே இனவாதக்குழுக்கள் தலையிட்டு முழுக்கிராமமக்களையும் குழப்பியிருக்கின்றனர். வெளியில் இருந்து வந்த சிலர் திட்டமிட்டு  இனவாததத்தை  கிளப்பி  அரசியல் ரீதியில்  சதி முயற்சியை மேற்கொண்டுள்ளமை  நிரூபணமாகிவருகின்றது. இந்த நாட்டில் மன்னர் காலத்தில் இருந்தே சிங்கள, முஸ்லிம்  நட்பு மேலோங்கி இருக்கின்றது.

முஸ்லிம் மக்கள்  பிரச்சினைக்கு செல்ல மாட்டார்கள். இந்த நாட்டின் இறைமையையும்  ஒருமைப்பாட்டையும்   பாதுகாப்பதற்கு    அர்ப்பணிப்புடன்  உள்ளனர்.  ஜெனிவாவில் சென்று   இந்த நாட்டுக்காக முஸ்லிம்கள்   குரல் கொடுத்துள்ளனர்.   ஆனால் தேசப்பற்று என்று  கூறிக்கொண்டு பிரச்சினையை ஏற்படுத்த முயற்சி செய்படுகின்றது. ஐக்கிய தேசியக்கட்சியானது இந்த நாட்டின்  அனைத்து  இன மக்களுக்காகவும்  குரல்கொடுத்து வருகின்றது.  1977 ஆம் ஆண்டு  ஜே.ஆர். ஜயவர்த்தன இந்த நாட்டில் ஒரு அரசியலமைப்பை கொண்டுவந்தார்.  அதில்  பௌத்தத்திற்கு முதன்மை வழங்கப்பட்டது. ஏனைய மதங்களுக்கும் உரிமை வழங்கப்பட்டது.

தற்போதைய இந்த  அசாதாரணநிலைமை குறித்து கவலையடைகின்றோம். முஸ்லிம் மக்கள் இந்த நாட்டுக்காக பாடுபட்டனர். தற்போது முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள்  தாக்கப்பட்டுள்ளன. இதனை பெரும்பான்மை பெளத்த  மக்களே எதிர்கின்றனர். ஒரு அரசியல் குழு தமது நோக்கத்தை அடைவதற்காக வெளிமாவட்டத்திலிருந்து வந்து இதனை செய்துள்ளது.  சட்டத்தை  கடுமையாக அமுல்படுத்தவேண்டுமென ஜனாதிபதியும் பிரதமரும் உத்தரவிட்டுள்ளனர் என்றார்.

அமைச்சரவை பேச்சாளர்  ராஜித சேனாரட்ன   குறிப்பிடுகையில்;

சமூக வலைத்தளங்களில்  இனவாதம் பரப்பப்படுகின்றது.   இந்த விடயத்தில் கடும் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது. இந்த  வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர்  ஜனாதிபதி நான் உள்ளிட்ட சில  அமைச்சர்களை சந்தித்து இந்த விடயம் குறித்து ஆராய்ந்தார். இதன் போது சமூக வலைத்தளங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.  அரசியலமைப்பின் 28 ஆவது பிரிவிற்கமைய இவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம். அரசியல் மற்றும் சிவில்  உரிமைகளுக்கான   சாசனத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கலாம். மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் குற்றவியல் தண்டனையின் கீழும் நடவடிக்கை எடுக்கலாம்.  கருத்து சுதந்திரத்தை ஏற்கிறோம். ஆனால் வன்முறையை  ஏற்படுத்தும் கருத்துக்கூறுவதை ஏற்கமுடியாது. இது தொடர்பில் அரசாங்கம் கடும்  நடவடிக்கை எடுக்கும்.

தற்போது திகன  அசம்பாவிதங்களுக்கு பின்னணியில் இருப்பவர்கள்   ஒரு அரசியல் கட்சியுடன் சம்பந்தப்பட்டவர்கள். இதில் நான்குபேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த இரண்டு பிரதேச சபை உறுப்பினர், ஒரு மாவட்ட அமைப்பாளர்,  ஒரு அரசியல்வாதியின்  செயலாளர் என பலர் சம்பந்தப்பட்டுள்ளனர். ஒரு  அரசியல் கட்சியை சேர்ந்த  ஒரு பிக்குவும்  உள்ளார். திட்டமிட்டு இந்த சதித்திட்டத்தை தீட்டியுள்ளனர். கடந்த தேர்தலில்    சிறுபான்மை மக்கள்  அரசாங்கத்திற்கே வாக்களித்தனர்.  இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஒருசிலர் இவ்வாறான நடவடிக்கையை எடுத்துள்ளனர்.  அரசாங்கத்திற்கு  இருக்கின்ற சிறுபான்மை மக்களின் ஆதரவை   இல்லாமல் செய்வதற்கே இந்த முயற்சி  மேற்கொள்ளப்பட்டுள்ளது.