நாட்டில் ஒரு சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள திருப்தியற்ற பாதுகாப்பு நிலைமையைத் தவிர்ப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். 

குற்றவாளிகள் தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரை வலுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

கண்டி - திகன, தெல்தேனிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வன்முறையை அடுத்து நேற்றையதினம் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் பல்லேகல மற்றும் தெல்தெனிய ஆகிய பகுதிகளில் இன்று மாலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் பிரிவினை செயல்வலுப்படுத்தி மட்டுப்படுத்தப்பட்ட எல்லைகளுடன் ஒரு வார காலத்திற்கு நாடுபூராகவும் அவசரகால நிலை ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அவசரகால நிலையை பிரகடனப்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்த விடயங்கள் பின்வருமாறு,

1. கடந்த இரு வாரங்களாக இடம்பெற்றுள்ள குழப்பமான மற்றும் சட்ட விரோத செயற்பாடுகள்.

2. அத்தகைய சம்பவங்களினால் ஏற்பட்டுள்ள உயிர் மற்றும் சொத்துக்களின் இழப்பு.

3. அத்தகைய சம்பவங்களினால் இனங்கள் மற்றும் சமயங்களுக்கிடையே குழப்பமான,

அமைதியற்ற நிலைமைகள் ஏற்பட்டுள்ளமை.

4. சொத்துக்கள், வணக்கஸ்தலங்கள், போக்குவரத்து வசதிகள் போன்றவற்றிற்கு

மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்களினால் ஏற்பட்டுள்ள இழப்புக்கள் .

5. மேற்கூறப்பட்ட சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுதல்.

மேற்படி நிகழ்வுகள் வன்முறை சூழ்நிலையில் கட்டமைக்கப்பட்ட குழுக்களினால்

மேற்கொள்ளப்பட்டுள்ளமை.

இந் நிலைமைகளை சீர்செய்வதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய அத்தியாவசிய நடவடிக்கையாக

மட்டுப்படுத்தப்பட்ட எல்லைகளுடன் பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் இரண்டாம்

பிரிவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, பாதுகாப்பான சூழலை மீண்டும் உறுதிசெய்தல், பொதுமக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதுடன் அத்தியாவசிய தேவைகளையும் சேவைகளையும் வழங்குதல் மற்றும் அமைதி நிலையை ஏற்படுத்தல் போன்ற காரணங்களுக்காக மட்டுப்படுத்தப்பட்ட எல்லைகளுடன் ஒருவார காலத்திற்கு பொதுமக்கள் கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் பிரிவினை செயல்வலுப்படுத்தி அவசரகால ஒழுங்கு விதியை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இவ்வாறு அவசரகால நிலை அமுல்படுத்தப்படுவதனால் விதிக்கப்படும் ஒழுங்கு விதிகளின் மூலம் தற்போதுள்ள நிலைமைகளை சீர்படுத்த தேவையான சட்ட அதிகாரங்கள் இலங்கை பொலிஸுக்கும் முப்படையினருக்கும் வழங்கப்பட்டுள்ளன.

ஏதேனும் சட்ட விரோத நடவடிக்கைகளோ அல்லது இன மற்றும் சமய ரீதியான அமைதியற்ற சூழ்நிலைகளோ அல்லது அவற்றை ஏற்படுத்தும் நபர்களோ இனங்காணப்படுவார்களாயின் அவர்களது இன, மத அடையாளங்களையோ அல்லது கட்சி, நிற அரசியல் தொடர்புகளையோ கருத்திற்கொள்ளாது பக்கச்சார்பற்ற துரித நடவடிக்கைகளை அவர்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி பாதுகாப்புத் துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இந்த ஒழுங்கு விதிகளை செயற்படுத்தும்போது அமைதியாகவும் நேர்மையாகவும் மக்களின் நலனிற்கும் அவர்களது அன்றாட வாழ்க்கைக்கும் இடையூறுகள் ஏற்படாதவண்ணம் செயலாற்றுமாறும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறாத வகையில் செயற்படுமாறும் பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் ஜனாதிபதி அவர்கள் விசேட அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.