மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு தடை விதித்து சென்னை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மதுரையைச் சேர்ந்த ஜெகதலபிரதாபன் என்பவர் உச்ச நீதி மன்றில் தாக்கல் செய்த மனுவில் ‘மதுரை ஆதீனம் 293ஆவது ஆதீனமாக நித்யானந்தாவை கடந்த 2012ஆம் ஆண்டு நியமித்தார். பின்னர் அவரை அப்பதவியில் இருந்து நீக்கி விட்டார். ஆனால் ஆதீனத்தையும், சொத்துகளையும் அபகரிக்கும் நோக்கில் நித்யானந்தா செயல்படுகிறார். எனவே மதுரை ஆதீனத்துக்குள் நுழைய அவருக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்து உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

"மதுரை சிவில் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு முடிவுக்கு வரும் வரை நித்யானந்தா மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. இதனை இந்து சமய அறநிலையத்துறை உறுதி செய்யவேண்டும். தேவை ஏற்பட்டால் பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

தற்போதுள்ள ஆதீனமாக உள்ளவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, மடத்தை நிர்வகிக்க முடியாத நிலை ஏற்பட்டால் மடத்தை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் உள்ள பிற மடங்களில் பின்பற்றப்படும் வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து, மடத்தின் இளைய மடாதிபதியை நியமிப்பது தொடர்பான வழிமுறைகளை அறிக்கையாக இந்த உச்ச நீதி மன்றில் 8 வாரத்துக்குள் அறநிலையத்துறை தாக்கல் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள பிற மடங்களில் இளைய மடாதிபதி நியமனம் தொடர்பாக ஏதாவது ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தால் அந்த ஒப்பந்தம் செல்லாது என்று அறிவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பழமையான மடங்கள் ஆசிரமங்களுக்கு அவப்பெயரை உருவாக்கும் விதமாக தலைமை மடாதிபதிகள் யாராவது செயல்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவு பிறப்பித்துள்ளார்.