ஏற்றுமதி வருமானம் அதிகரித்தாலும் இறக்குமதி செலவு தொடர்ந்து உயர்வு

Published By: Robert

06 Mar, 2018 | 10:15 AM
image

நாட்டின் பொருளாதாரம் தொடர்ச்சியாக நெருக்கடி நிலையிலேயே இருந்து வருகின்றது. அரசாங்கம்   பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்த போதிலும்   அதன்  நெருக்கடிகள் தொடர்ந்து கொண்டே  இருக்கின்றன. குறிப்பாக கடந்த  2017 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை பொருளாதார வளர்ச்சியானது எதிர்பார்த்தளவு இடம்பெறவில்லை.

 வரட்சி,   வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் நாட்டின்  உற்பத்திப் பொருளாதாரம் கடுமையாக  பாதிக்கப்பட்டது.   இதனால் எதிர்பார்த்தளவு உற்பத்தியை நாம் அதிகரித்துக் கொள்ளவில்லை. எவ்வாறெனினும் அரசாங்கம்  வெளிநாடுகளுடன்  வர்த்தக உடன்படிக்கைகளை செய்துகொள்வதன் மூலம் பொருளாதாரத்தை   மேம்படுத்துவதற்கு முயற்சித்து வருவதை காண முடிகின்றது.   

உதாரணமாக   சீனாவுடன்  சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்று முயற்சிக்கப்பட்டு வருகின்றபோதிலும் இதுவரை  அம் முயற்சி கைகூடவில்லை. அதேபோன்று வேலையின்மை வீதம் 4ஆகவும் வறுமை வீதம்  4.1 ஆகவும் கடந்த வருடத்தில் பதிவாகியிருந்தது. 

அதேபோன்று கடந்த 2017 ஆம் ஆண்டு  வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பொறுத்தவரையில் 419 மில்லியன் டொலர்களே கிடைத்துள்ளன.  கடந்த 2016ஆம் ஆண்டில் 332 மில்லியன் டொலர்  முதலீடுகள் கிடைத்த நிலையில்  2017 ஆம் ஆண்டில்  அதனைவிட சற்று அதிகரித்து காணப்படுகின்றன. 

இந்நிலையில் 2017ஆம் ஆண்டில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் எவ்வாறு  இடம்பெற்றுள்ளன என்பதைப் பார்த்தால்  கடந்த வருடத்தில்  மொத்த ஏற்றுமதி வருமானமாக 11360 மில்லியன் டொலர்கள்  பதிவாகியிருக்கின்றன. அதேபோன்று இறக்குமதி செலவாக   20980 மில்லியன்  டொலர்கள் பதிவாகியிருக்கின்றன. இதன்மூலம்  2017 ஆம் ஆண்டின் வர்த்தக மீதியானது 9620  என்ற மறைபெறுமானத்தில்  அமைந்திருக்கின்றது. 

சுற்றுலாத்துறை மூலம்  3631 மில்லியன்  டொலர்கள் வருமானம்  கிடைத்திருக்கின்றன.  எவ்வாறிருப்பினும் ஏற்றுமதி வருமானம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சற்று அதிகரித்திருந்தாலும்  கிட்டத்தட்ட அதே அளவிலேயே   இறக்குமதி  செலவும் அதிகரித்தே காணப்படுகின்றது.  கடந்த 2016 ஆம் ஆண்டின் வர்த்தக மீதியானது 8873 மில்லியன் டொலர்களாக இருந்த நிலையில் இம்முறை அது 9620 மில்லியன் டொலர்களாக பதிவாகியிருக்கிறது. 

 ஏற்றுமதி வருமானத்தைப் பொறுத்தவரையில்  கைத்தொழில்கள்  ஏற்றுமதிகள் மூலம் 8541.6  மில்லியன் டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளன. அதேபோன்று  வேளாண்மை உற்பத்திகள் மூலம்  2767.2 மில்லியன் டொலர்கள் கிடைத்திருக்கின்றன.  இரு வகையான ஏற்றுமதி வருமானமும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளமையையே அவதானிக்க முடிகின்றது. வேளாண்மை உற்பத்தியை பொறுத்தவரையில் தேயிலை உற்பத்தி கடந்த வருடத்தில்  சிறந்த வளர்ச்சி பெற்றிருப்பதை அவதானிக்கலாம். 

அதாவது 2016 ஆம் ஆண்டில் 1269 மில்லியன் டொலர்களாக இருந்த  தேயிலை ஏற்றுமதி வருமானம் 2017 ஆம் ஆண்டில் 1529.8   மில்லியன் டொலர்களாக  அதிகரித்திருக்கிறது. இது  20.5 வீத அதிகரிப்பை காட்டி நிற்கிறது. இதன்மூலம்  தேயிலை உற்பத்தி  அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இதேவேளை கைத்தொழில் ஏற்றுமதியைப் பொறுத்தவரையில் புடவை மற்றும் ஆடைகள் ஏற்றுமதி மூலம்  5031.9  மில்லியன் டொலர்கள்    வருமானமாக கிடைத்திருக்கின்றன. 

இதுவே 2016 ஆம் ஆண்டில் 4884 மில்லியன் டொலர்களே கிடைத்திருந்தன.  கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின்   ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைக்கப் பெற்றிருந்தது. இதனூடாக புடவை ஏற்றுமதி வருமானம்   அதிகரிப்பதற்கு வழிகோலியிருக்கிறது. மேலும்  ஏனைய  பொருட்கள் ஏற்றுமதிகளும் அதிகரிப்பையே காட்டி நிற்கின்றன. எவ்வாறெனினும் இரத்தினக்கற்கள், வைரங்கள்,  ஏற்றுமதியானது   2016 ஆம் ஆண்டை விட 2017 ஆம் ஆண்டில் 6.1 வீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளதைக் காண முடிகின்றது.  

இவ்வாறு  ஏற்றுமதி வருமானமானது 2017 ஆம் ஆண்டில் 11360.2  மில்லியன் டொலர்களாக காணப்படுகின்றது. இதுவே 2016 ஆம் ஆண்டில் 10309.7  மில்லியன் டொலர்களாகவே காணப்பட்டது.  10.2 வீத வளர்ச்சியை ஏற்றுமதி வருமானம் பெற்றிருப்பதை அவதானிக்க  முடிகிறது. 

பிரதானமாக ஏற்றுமதியில் ஆடைத்துறையிலும் தேயிலைத்துறையிலும் நாடு முன்னேற்றம் கண்டிருக்கிறது என்று கூறலாம். இதேவேளை நாட்டின்  இறக்குமதி நிலையை நாம்  நோக்கினால்  2017ஆம் ஆண்டின் இறக்குமதி செலவானது 20979.8  மில்லியன் டொலர்களாக பதிவாகியிக்கிறது. இதுவே கடந்த வருடம் 19182.8 மில்லியன் டொலர்களாக பதிவாகியிருந்தது. 

நுகர்வுப்பொருட்களைப் பொறுத்தவரையில்  கடந்த வருடம் அதிகரித்த செலவு ஏற்பட்டுள்ளது.  உணவு, மற்றும் குடிவகைகள், தானியங்கள், பால் உற்பத்திகள், கடலுணவு உள்ளிட்ட   நுகர்வு பொருட்களுக்காக   4502.5  மில்லியன் டொலர்கள் செலவாகியிருக்கின்றன. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 4.3 வீத அதிகரிப்பை காட்டுகின்றது. அதேபோன்று  இடை நிலைப்பொருட்களுக்கே அதிகளவு செவு ஏற்பட்டிருக்கின்றது. 2017ஆம் ஆண்டில் இடைநிலை பொருள் இறக்குமதிக்காக  11435.8  மில்லியன் டொலர்கள் செலவாகியிருக்கின்றன. இது 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15.9 வீத அதிகரிப்பை காட்டுகின்றது. 

இதில் எரிபொருளுக்கே அதிகளவு செலவு செய்யப்பட்டிருக்கின்றது. எரிபொருளுக்காக 2017 ஆம் ஆண்டு 3427.9 மில்லியன் டொலர்கள்  செலவாகியிருக்கின்றன.  இது 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 38.2 வீத  அதிகரிப்பை காட்டுகின்றது.  இதன்மூலம்  எரிபொருட்களுக்கான  செலவு அதிகரிப்பதை காண முடிகின்றது. 

முதலீட்டு பொருட்களுக்கான செலவானது 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவடை  ந்துள்ளதை  அவதானிக்க முடிகிறது.  அந்த வகையில்   இறக்குமதி செலவு  தொடர்ந்து அதிகரித்து செல்வதையும் ஏற்றுமதி வருமானம் தொடர்ந்து குறைவடைந்து செல்வதையுமே   அவதானிக்க முடிகின்றது. 

இந்நிலையில்   இறக்குமதி செய்யும் பொருட்களின் அளவைக் குறைத்து ஏற்றுமதி சார் உற்பத்தியை அதிகரிப்பது அவசியமாகின்றது. விசேடமாக  ஏற்றுமதி  பொருள் உற்பத்தியில் நாடு கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது.  தொடர்ந்து இவ்வாறு அதிகமான பொருட்களை இறக்குமதி செய்வதை தவிர்த்து உள்நாட்டு பொருள் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். 

தற்போது அரசாங்கம் பல்வேறு சர்வதேச நாடுகளுடன்  வர்த்தக உடன்படிக்கைகளை செய்து வருகின்ற நிலையில் அந் நாடுகளின்   சந்தை வாய்ப்பை பெற்றால்    எமது ஏற்றுமதியை அதிகரிக்க முடியும். குறிப்பாக சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை செய்வதற்கு அரசாங்கம் உத்தேசித்திருக்கிறது.  அத்துடன் ஏற்கனவே இலங்கைக்கு இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை உள்ளது. 

இந்நிலையில் உலகின்   அதிகூடிய சனத்தொகையைக் கொண்ட சீனாவுடன்  அரசாங்கம்  சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை செய்யவிருப்பதானது இலங்கைக்கான  சந்தைவாய்ப்பை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதனூடாக  ஏற்றுமதி  பரப்பை  விஸ்தரித்து  ஏற்றுமதி வருமானத்தை அதிகரித்துக்கொள்ள முடியும். அதேபோன்று  எமது நாட்டின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம்  இறக்குமதி செலவை குறைத்துக்கொள்ள  முடியும். இது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. 

கடந்த வருடத்தின் நடுப்பகுதியில் இலங்கையின் பொருளாதார நிலை குறித்து  உலக வங்கி அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.  அதில்   மேல் நடுத்தர வருமானம் ஈட்டுகின்ற நாடென்ற ஸ்தானத்தை அடையும் இலட்சியத்தை இலங்கை தன்னகத்தே கொண்டுள்ளதென்றும்  ஆனால் இலங்கை அதன் முழுமையான திறனை எய்தவேண்டுமாயிருந்தால்  சீர்திருத்த நிகழ்ச்சிநிரலை முன்நகர்த்துவதுடன் அதன் பொருளாதாரத்திற்கு புத்துயிரளிக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தது. 

அந்தவகையில் பொருளாதார ரீதியில் முன்னேற்றத்தை  அடையவேண்டுமாயின் உற்பத்திப் பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கு  நடவடிக்கை அவசியமாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58