இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகள் பங்குகொள்ளும் சுதந்திரக் கிண்ணத் தொடர் நாளை 6 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளாக நடைபெறும் இப்போட்டித் தொடரின் அனைத்துப் போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

லீக் போட்டிகளில், ஒவ்வொரு அணியும் எதிரணிகளை தலா இரண்டு முறை எதிர்த்தாடும். புள்ளிகள் அடிப்படையில் முதலிரு இடங்களுக்கு முன்னேறும் இரு அணிகள் 18 ஆம் திகதியன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் விளையாடும்.

இலங்கை சுநத்திரமடைந்து 50 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட சர்வதேச ஒருநாள் முத்தரப்பு சுதந்திரக் கிண்ணத் தொடரில் இலங்கை, இந்தியா, நியூஸிலாந்து ஆகியன விளையாடியிருந்தன. இதில் குறித்தஒரு அணி எதிரணியை தலா மூன்று முறை எதிர்த்து விளையாடியிருந்தது. 9 லீக் போட்டிகளில் 4 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன. 

இறுதிப் போட்டியில் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணியை மொஹமட் அஸாருதீன் தலைமையிலான இந்திய அணி எதிர்த்தாடியது. 

முதலில் துடுப்பெடுத்தாட  தீர்மானித்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 307 ஓட்டங்களை குவித்தது. துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக சச்சின் (128), கங்குலி (109) சிறப்பாகத் துடுப்பெடத்தாடினர். 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணிக்கு சனத் ஜயசூரிய (32) மற்றம் ரொமேஷ் களுவித்தாரண (24) ஜோடி சிறந்த ஆரம்பத்தை கொடுத்தது. இதையடுத்து அரவிந்த டி சில்வா மற்றும் மார்வன் அத்தபத்து ஜோடி  அதிரடிக துடப்பெடுத்தாடி இலங்கை அணியை சிறப்பான நிலைக்கு இட்டுச் சென்றனர். அத்தபத்து (36), அர்ஜுன (23) ஆட்டமிழந்தாலும் மறுமுனையில் அரவிந்த இந்திய பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த வண்ணமிருந்தார். இலங்கை அணி 43.3 ஓவர்களில் 272 ஓட்டங்களை பெற்றபோது அரவிந்த 105 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இலங்கை அணியின் வெற்றிக்கு கைவசம் 5 விக்கெட்டுகள் இருக்க, 39 பந்துகளில் 36 ஓட்டங்களே தேவையாகவிருந்தது. உப்புல் சந்தன (4), குமார் தர்மசேன (2) ஆகியோர் தங்களது விக்கெட்டு தரைவார்க்க, மறுமுனையில் நிதானமாக துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தரொஷான் மஹநாம 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க போட்டியில் திருப்புமுனை ஏற்பட்டது. இதன்போது இலங்கை அணிக்கு 12 பந்துகளில் 13 ஓட்டங்களே வெற்றிக்கு தேவைப்பட்டது. இறுதியில் இலங்கை அணி 49.3 ஓவர்களில் 301 ஓட்டங்களைப் பெற்று 6 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. போட்டியின் நாயகனாக சச்சின் டெண்டுல்கர் தெரிவானதுடன், தொடரின் நாயகனாக அரவிந்த டி சில்வா தெரிவானார். 

இலங்கையில் 1998 இல் நடைபெற்ற பொன்விழா  சுதந்திர கிண்ணத்தை இந்தியா வெற்றிக்கொண்டிருப்பினும், இந்தியாவில் 1997 நடைபெற்ற  பொன்விழா  சுதந்திர கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியிருந்தமை நினைவுகூரத்தக்கது.

மெத்தியூஸ் காயம்

பங்களாதேஷில் இடம்பெற்ற முக்கோண ஒரு நாள் தொடரின் போது காயத்துக்குள்ளான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான இலங்கை அணித்தலைவர் எஞ்சலோ மெத்தியூஸ், அசேல குணரட்ன, ஷெஹான் மதுஷங்க ஆகியோர் உபாதைக்குள்ளாகிருப்பதால்,  இலங்கை கிரிக்கெட் குழாத்தில் இணைக்கப்படவில்லை. 

சந்திமால் தலைமை

பங்களாதேஷில் நடைபெற்ற மூவகைப் போட்டிகளிலும் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு இலங்கை அணியை சிறப்பாக வழிநடத்திய இலங்கை டெஸ்ட் அணித்தலைவரான தினேஷ் சந்திமால் இத்தொடரிலும் இலங்கை அணிக்கு தலைமை தாங்குகிறார். இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் உப அணித்தலைவராக செயற்படவுள்ளார்.

காயத்திலிருந்து மீண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா, வேகப்பந்துவீச்சாளர்களான நுவன் பிரதீப் மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் தற்போது பூரணமாக குணமாகியுள்ளதால் மீண்டும் இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் சபை அண்மையில் நடத்திய உள்ளூர் இருபதுக்கு 20 தொடரில் விளையாடிய லசித் மாலிங்க 3 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்த போதிலும், உத்தேச குழத்தில் கூட இடம் கிடைக்காமை அவரது துரதிர்ஷ்டமே. 

இலங்கை குழாம்

தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), சுரங்க லக்மால் ( உப அணித்தலைவர்) , உபுல் தரங்க, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், தசுன் சானக்க, குசல் பெரேரா, திசர பெரேரா, ஜீவன் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, நிரோஷன் திக்வெல்ல, இசுரு உதான, ஜெப்றி வெண்டர்சே, அக்கில தனஞ்சய, அமில அபொன்சோ, அசித்த பெர்ணான்டோ, லஹிரு குமார, நுவன் பிரதீப், துஷ்மந்த சமீர, தனஞ்சய டி சில்வா

தோனி, கோஹ்லிக்கு ஓய்வு

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, மஹேந்திர சிங் தோனி, ஹார்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. கோஹ்லிக்கு பதிலாக ரோஹித் ஷர்மா இந்திய அணியை வழிநடத்துகிறார். இக்குழாத்தில், தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், வொஷிங்டன் சுந்தர் இணைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் அஷ்வின், ஜடேஜா ஆகியோர் அணியில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.

இந்திய குழாம்

ரோஹித் ஷர்மா ( அணித்தலைவர்) , ஷிகர் தவான், லோக்கேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூதா, வொஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால், அக்ஸர் பட்டேல், விஜய் சங்கர், ஷ்ரதுல் தாகூர், ஜயதேவ் உனட்கட், மொஹமட் சிராஜ், ரிஷாப் பாண்ட்

ஷகிப் விளையாடுவாரா?

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஷகிப் அல் ஹசன் பங்களாதேஷில் அண்மையில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின்போது காயத்துக்குள்ளானார். இதனால், எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது. தற்போது பூரண குணமடையாவிட்டாலும், சுதந்திரக் கிண்ணத் தொடரக்கான பங்களாதேஷ் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். இவர் பங்களாதேஷ் பங்குகொள்ளும்  கடைசி இரண்டு லீக் போட்டிகளிலும் விளையாடுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறித்துள்ளது.

இதேவேளை, சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பங்களாதேஷின் சர்வதேச ஒருநாள் அணித்தலைவரான மஷ்ரபி மொர்தசாவை மீண்டும் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் சபை கேட்டிகொண்டிருந்த போதிலும் அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்திரந்தமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் குழாம்

ஷகிப் அல் ஹசன் ( அணிதலைவர்), மஹ்மதுல்லா ரியாத், தமீம் இக்பால், செளம்யா சர்கார், முஷ்விக்குர் ரஹீம், சபீர் ரஹ்மான், முஸ்தாபீஸஹர் ரஹ்மான், ருபேல் ஹுசைன், அபு ஜெய்த், தஸ்கின் அஹமட், இம்ருல்க கயிஸ், நூருல் ஹசன், மெஹெதி ஹசன், அரிபுல் ஹக், நஸ்முல் இஸ்லாம், அபு ஹைதர் 

போட்டி அட்டவணை

6 ஆம் திகதி இலங்கை எதிர் இந்தியா, 8 ஆம் திகதி இந்தியா எதிர் பங்களாதேஷ், 10 ஆம் திகதி இலங்கை எதிர் பங்களாதேஷ், 12 ஆம் திகதி இலங்கை எதிர் இந்தியா, 14 ஆம் திகதி இந்தியா எதிர் பங்களாதேஷ், 16 ஆம் திகதி இலங்கை எதிர் பங்களாதேஷ், 18 ஆம் திகதி இறுதிப் போட்டி