மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில், வேகமாக வளர்ந்து வரும் பாகிஸ்தானை தளமாகக்கொண்டியங்கும் MCB வங்கி, கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள தனது புதிதாக மெருகேற்றம் செய்யப்பட்ட இலங்கையின் பிரதான அலுவலகத்தை அண்மையில் மீளத்திறந்திருந்தது.

2018 பெப்ரவரி 22 ஆம் திகதி இந்த அலுவலகம் மீளத்திறந்து வைக்கப்பட்டிருந்ததுடன் இதில் பிரதம அதிதியாக MCB வங்கியின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இம்ரான் மக்பூல், குழுமத்தின் பிரதான ஒழுக்க மற்றும் கட்டுப்பாட்டு தலைமை அதிகாரியான ஃபாரிட் அஹமட், MCB வங்கியின் இலங்கைக்கான பொது முகாமையாளர் ஆலி ஷாஃபி மற்றும் வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஏனைய நலன் விரும்பிகளும் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.

இந்த வளாகத்தில் அமைந்துள்ள இலங்கைக்கான பிரதான அலுவலகம் மற்றும் கிளையினூடாக கூட்டாண்மை வங்கியியல் செயற்பாடுகள் பெருமளவு முன்னெடுக்கப்படுவதுடன் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமாக மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க பொருத்தமான நிதித்தீர்வுகளும் வழங்கப்படுகின்றன. MCB வங்கியினால் கூட்டாண்மை வங்கியியல் வியாபாரத்தில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பு வழங்கப்படுவதுடன் தற்போது நாட்டில் காணப்படும் பெருமளவான முன்னணி கூட்டாண்மை நிறுவனங்கள் MCB வங்கியுடன் நீண்ட கால உறவுகளை பேணி வருகின்றன.

MCB வங்கியின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இம்ரான் மக்பூல் கருத்துத் தெரிவிக்கையில்,

“இரு தசாப்த காலங்களில் எமது வாடிக்கையாளர்கள் காண்பிக்கும் அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியாக எம்முடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட காண்பிக்கும் ஈடுபாடு ஆகியவற்றுக்கு நாம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த குறுகிய காலப்பகுதியில் நாம் இலங்கையில் காணப்படும் சர்வதேச பல்தேசிய வங்கிகளில் அதிகளவு கிளை வலையமைப்பைக் கொண்ட வங்கிகளில் இரண்டாவது நிலைக்கு உயர்ந்துள்ளோம். சாதாரண வியாபாரங்களுக்கு அப்பால்ரூபவ் நாம் தற்போது ஐக்கிய அரபு இராஜ்ஜியம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையே எமது சர்வதேச வலையமைப்பினூடாக வணிக செயற்பாடுகளை வலுப்படுத்தி பெறுமதியை ஏற்படுத்திக் கொடுக்க எண்ணியுள்ளோம். 

இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டலுடன் மற்றும் வாடிக்கையாளர்களின் உதவியுடன் இன்று நாம் முன்னெடுத்துள்ள இந்த செயற்பாடுகள் எதிர்காலத்தில் சகல பங்காளர்களுக்கும் பெரிதும் பங்களிப்பை வழங்குவதாக அமைந்திருக்கும்” என்றார்.

MCB வங்கியின் இலங்கைக்கான பொது முகாமையாளர் ஆலி ஷாஃபி ஒன்றுகூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றுகையில்,

 “MCB வங்கியின் இலங்கைக்கான பிரதான அலுவலகத்தை புதுப்பித்து திறந்துள்ளதையிட்டு பெருமையடைகிறோம். வளாகத்தின் முதலாவது மீளறிமுகமாக இது அமைந்துள்ளதுடன், இலங்கையின் வங்கியியல் துறைக்கும் எமது வாடிக்கையாளர்களுக்கும் நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தக்கூடிய பல மெருகேற்றங்களை கொண்டுள்ளது.

இந்த வளாகம் நவீன வங்கியியல் கொடுக்கல் வாங்கல்களுக்கு உகந்த வகையில் மீள வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் சகல MCB வெளிநாட்டு கிளைகளிலும் பின்பற்றப்படும் கூட்டாண்மை வர்த்தக நாம தொனிப்பொருளுக்கமைய அமைந்துள்ளது.

இலங்கையில்,  உள்நாட்டு சந்தை தேவைகள் மற்றும் போக்குகள் ஆகியவற்றுக்கு பொருத்தமான சில தீர்வுகளை நாம் இலங்கையில் கொண்டுள்ளோம். எமது வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான பங்களிப்பு மற்றும் எம்மை நாடுகின்றமைக்காக நாம் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ச்சியான அவர்களுக்கான சேவைகளை பெற்றுக்கொடுக்க எம்மை அர்ப்பணித்துள்ளோம்” என்றார்.

MCB வங்கி லிமிட்டெட், தனது செயற்பாடுகளை 1994 ஆம் ஆண்டு முதல் ஆரம்பித்திருந்தது. சர்வதேச மற்றும் பிராந்திய அனுபவங்களை நாட்டினுள் பிரயோகிக்கிறது. மேலும் ICRA லங்கா லிமிட்டெடின் [SL] A+ (Stable) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது. கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, மருதானை, வெள்ளவத்தை, கொள்ளுப்பிட்டி, கண்டி, காலி மற்றும் மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் கிளைகள் அமைந்துள்ளன.