நடிகர் கமல்ஹாசன் "மக்கள் நீதி மய்யம்" என்ற கட்சியை ஆரம்பித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கட்சியின் உயர்மட்ட குழு நிர்வாகிகள், பேச்சாளர்களை நியமித்து கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சுற்றுப் பயணத்தின் போது விவசாயிகள், பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்கிறார்.

இதற்கிடையே பெண்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு எதிர் வரும் 8ஆம் திகதி மாலை 5 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடை பெறும் என்று கமல்ஹாசன் அறிவித்தார்.

சென்னையில் நடக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் கூட்டத்தில் கமல்ஹாசன் தலைமை தாங்கி பேசுகிறார். பொதுக்கூட்டத்தை நடத்த கட்சியின் உயர் நிலை குழு உறுப்பினர்களான நடிகை ஸ்ரீப்ரியா, கமீலா நாசர் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் தினவிழா பொதுக்கூட்டத்தில் பெண்கள் பங்கேற்க கமல் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கமலின் டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் உயர்நிலை குழு உறுப்பினர்கள் நடிகை ஸ்ரீப்ரியா, கமீலா நாசர் ஆகியோர் அழைப்பு விடுத்து பேசியுள்ளனர்.

அதில்,

"ஒவ்வொரு நாளும் பெண்கள் தினம், உலகம் அதை கொண்டாடுகிற தினம் மார்ச்  8ஆம் திகதி மக்கள் நீதி மய்யம் இந்த திருநாளை கொண்டாடுகிறது. பெண்கள் என்று சொல்லி கொள்ளுகிற அனைவரையும் வரவேற்கிறது மக்கள் நீதி மய்யம். பெண்களின் உரிமைக்கும், மேன்மைக்கும் மனப்பூர்வமாக செயல்படும். இதில் கட்சி தலைவர் கமல்ஹாசன் உங்களை வரவேற்று பேசுகிறார். வாருங்கள் உரையாடுவோம். கொண்டாடுவோம். நம் தேவைகளுக்கு, பிரச்சினைகளுக்கு உங்கள் கேள்விகள் மூலம் பதில் அளிக்கிறார். வாருங்கள் பாதுகாப்பான புதிய பாதையை நோக்கி செல்வோம்" என்று கூறி உள்ளார்.