ஆர்.யசி

கொலை களமாக சிரியா : இந்தக் கொலைகள் எல்லாம் ஏன் நடக்கிறது.? (பகுதி 01)

இதனிடையே அரசியல் சூழ்ச்சிகளும் - காய் நகர்த்தல்களும், யுத்த முஸ்தீபுகளும் நிறைந்துள்ளன. இதற்கு மண்ணாசை மட்டுமல்ல மற்றவரை அச்சுறுத்தி அடக்கிவைக்க வேண்டும் என்ற மனநோயும் கூட பிரதான காரணமாகும். அதன் விளைவுகள் கடந்த ஏழு ஆண்டுகளில் ஐந்து மில்லியன் பொதுமக்கள் கொல்லப்பட்டமையும், 12 மில்லியன் மக்கள் சொந்த நாட்டினை விட்டு இடம்பெயர்ந்து அனாதரவாக வாழ்வதுமேயாகும். தினந்தினம் நூற்றுக்கணக்கான குழந்தைகள் செத்து மடிகின்றனர். குப்பைகளாக குவிக்கப்படுகின்றனர். 

பிஞ்சுக் குழந்தைகள் தமது குடும்பத்தை, உறவுகளை எதிர்காலத்தை ஏன் இழக்க வேண்டும். கடந்த 2016 ஆம் ஆண்டிலும் பார்க்க 20 வீதத்தினால் இறுதி ஆண்டுகளில் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் மாத்திரம் 10,200 பொதுமக்கள் சிரியாவில் கொல்லப்பட்டுள்ளனர். இதில்  2298 சிறுவர்களும், 1536 பெண்களும் உள்ளடங்குகின்றனர் என சர்வதேச கண்காணிப்பு குழுவின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.  இந்த ஆண்டில் யுத்த நிறுத்தம் கொண்டுவரப்பட்ட அந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 230 பொதுமக்கள்  கொல்லப்பட்டுள்ளனர். இதில் 45 சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர். கொல்லப்பட்ட பொதுமக்களில் 90 வீதமானோர் குண்டுவீச்சில் கொல்லப்பட்டுள்ளனர். 

அடுத்த சமுதாயத்தை கட்டியெழுப்ப மிகப்பெரிய இடைவெளியினை ஏற்படுத்தியுள்ளது இந்த யுத்தம். கட்டாயமாக சிறுவர்களை பாதுகாக்க வேண்டிய கட்டத்தில் சிரியா தவிக்கின்றது. இந்த மூன்று ஆண்டுகளில் மாத்திரம் 7 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர்களை பலிகொடுத்துள்ளது.  தம்முடைய சொந்த மண்ணில் வாழவும் முடியாது, அகதியாக வேறு மண்ணை நாடவும் முடியாது தவிக்கும் அவலம் சிரியாவில் இன்றுவரை இடம்பெற்று வருகின்றது. 

சொந்த மண்ணை விட்டு அகதியாக வாழும் அவல நிலை மிகக்கொடுமையானது. எனினும் தங்கள் மண்ணை விட்டு கடல் மார்க்கமாக வெளியேற முயற்சித்த  பல ஆயிரக்கணக்கான சிரிய மக்கள்  கடலிலேயே மாண்டுபோன  துயரமே அதிகமாகும்.   " எங்கள் வலிகளை நீங்கள் அனுதாபத்துடன் புரிந்துகொள்ள முடியும், ஆனால் சொந்தமாக அனுபவித்துப்பார்க்காத உணர்ச்சிகள் எல்லாமே இரண்டாம் பட்சமே" இதுவே அழிவை எதிர்கொண்ட மக்களின் அடிமைவாதமாகும். 

சாமானியர்கள் கொத்துக்கொத்தாய் கொன்று ஒழிக்கப்படும் காலகட்டம். தொகையை வெறும் எண்ணிக்கையில் பதிவாக்கப்பட்டு வருகின்றது.  அன்று முள்ளிவாய்க்கால் இன அழிப்பு எவ்வாறு  அத்துயரத்தை கண்முன்னே காட்டியதோ, செச்சினியா இன அழிப்பு எவ்வாறு  இன்றும் கண்முன்னே நிற்கின்றதோ, வெகுகாலமாக  பாலஸ்தீன் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் சாமானிய அப்பாவி மக்கள் கொத்துக்கொத்தாய் கொன்று குவிக்கப்பட்டு  வருவதைப்போல, குர்த் இனத்தவரின் வேதனை அழியா வடுக்களாய் தெரிகின்றதைப்போல   இன்றும் சிரியாவின் துயரம் முடிவில்லா தொடர்கதையாக அமைந்துள்ளமை சாபக்கேடாகும்.  

இத்தனை அழிவுகளுக்கும் வெறுமனே உள்நாட்டு இனங்களுக்கிடையிலான கிளர்ச்சியே  காரணம் என கருதலாம். அரசாங்கத்தின் மீதான அதிருப்தியும் சர்வாதிகார போக்கும் என நம்பலாம். ஆனால் இவற்றை தாண்டிய சர்வதேச அரசியல் காய்நகர்த்தல் மட்டுமே இத்தனை அழிவுக்கும் பிரதான காரணமாகும்.  இது சர்வதேச சதி வலை. தமது ஆதிக்கத்தை வல்லரசை, ஆயுத பலத்தை மற்றும் இராணுவ பலத்தை வெளிப்படுத்தவும் நட்புறவு நாடுகளை திருப்திப்படுத்தவும் நடைபெற்றுவரும் சர்வதேச கூத்து. 

சியாவை பலப்படுத்த வேண்டும் என்ற தேவை ஈரானுக்கு, ஆகவே  சிரிய தலைவர் ஆசாத்துக்கு ஆதரவாக ஷியா பிரிவைச் சேர்ந்த நாடான ஈரான் முழு ஒத்துழைப்பை வழங்குகின்றது. நட்பு நாடான ரஷ்யாவும் முழு உதவியும் செய்துவருகிறது. வடகொரியா இரகசியமாக ஆயுதங்களை அனுப்பிவைக்கின்றது. இரசாயன ஆயுதங்களின் தாயகம் கொரியா, அவர்களின் ஆயுதங்களே இன்று சிரியாவில் நிறைந்து வழிகின்றன.  

மறுபுறம் சவூதி அரேபியா, கட்டார்  உள்ளிட்ட சன்னி பிரிவு நாடுகள் ஆசாத்துக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு உதவி செய்துகொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் தாண்டி  அமெரிக்காவும்  நேரடியாகவே உதவி செய்துவருகிறது. எனவே, சிரியாவில் நடப்பதும் பிறநாடுகளால் தூண்டப்பட்ட ஒரு யுத்தமே தவிர இது வெறும் உள்நாட்டு உரிமைப் போராட்டம் மட்டுமேயல்ல. இதுவே சிரியாவை ஒரு போர்க்களமாக மாற்றியமைத்தது. 

சிரியாவைப் பொறுத்தவரை அனைத்து  பக்கங்களிலும் எதிரிகளின்  ஆக்கிரமிப்பே உள்ளது. சிரிய இராணுவ அரசாங்கம் ஆட்சியினை தக்கவைக்கப் போராடுகின்றது, துருக்கிய கிளர்ச்சியாளர்கள், குர்திஸ் கிளர்ச்சியாளர்கள்,  ஐஎஸ் தீவிரவாதிகளின் மதக் கொள்கை போராட்டம், நுஸ்ரா குழுக்களின் போராட்டம், இஸ்லாமிக் முன்னணி குழுக்கள் ஒருபுறம் என உள்ளத்து கிளர்ச்சிகள். மறுபுறம்  சிரியா அரசுக்கு ஆதரவாக ரஷ்யா போர்க்களம் இறங்குகின்றது.  கிளர்ச்சியாளர்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா போராட் டக்காரர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இரண்டு வல்லரசுகளையும் ஆதரித்து இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி, ஜேர்மன், பிரான்ஸ், பிரிட்டன், ஈராக், ஈராக்கிய குர்திஸ் அமைப்பு, மத்திய கிழக்கு வல்லரசு நாடுகள் என அனைத்து தரப்புமே போராட்டத்தில் இறங்கியுள்ளன. இந்த அந்நிய சக்திகளுக்கிடையில் சிக்கித் தவிக்கிறார்கள் சிரிய மக்கள்.

 நாற்காலி சுகம் கண்டுவிட்ட ஆட்சிபீடமோ அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள எத்தகைய கடுமையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முனைகிறது. இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அமெரிக்கா, ரஷ்யா, சீனா, கொரியா, பிரிட்டன், பிரான்ஸ், அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் வல்லரசுகள் போன்ற நாடுகள் அனைத்துமே குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கின்றன.

சிரியாவின் கதறல் உலக  நாடுகளின் காதுகளில் விழவில்லை, உலகத்தின் நீதிமன்றமான ஐக்கிய நாடுகள் சபை மௌனம் காத்து வருகின்றது.  சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள கிழக்கு கூட்டாவில், உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.நா. நீட்டித்துள்ளது. விமான தாக்குதல்களில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக செய்திகள் வரும் நிலையில், ஐ.நா. இந்த கோரிக்கையை நீட்டித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கூடியது. இதில் சிரியாவில் தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் சிரிய அரசின் நண்பனான ரஷ்யாவோ அதனைக் கேட்பதாக இல்லை.  போர் அதிகரித்த எட்டு நாட்களில் சிரிய அரசின் விமான தாக்குதலால் சுமார்  600 பேர் கொல்லப்பட்டதாக  சர்வதேச ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டு வருகின்றன. சிரியாவின் தலைநகர் டாமஸ்கஸுக்கு அருகே உள்ள கிழக்கு கூட்டா பிராந்தியமே  கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள  மிக முக்கிய பிராந்தியமாகும். இறுதியான பிராந்தியமும்கூட. 

கிழக்கு கூட்டாவில்  இப்போது என்ன நடக்கிறது, திட்டமிட்ட இன அழிப்பு, கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர். பீரங்கி குண்டுகள் வீசப்படுகின்றன. தொடர்ச்சியாக அரசு நடத்திய விமான தாக்குதல்களில் பலநூறு பேர்  கொல்லப்பட்டதாக மருத்துவ பராமரிப்பு மற்றும் நிவாரண அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்தது.

இவற்றை வேடிக்கை பார்த்துவரும் ஐக்கிய நாடுகள் சபை என்ன நடவடிக்கை எடுக்கின்றது.  ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய ஐ.நா. செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ், “பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை திறம்பட செயற்படுத்தினால் மட்டுமே அவை அர்த்தமுள்ளவையாக இருக்கும்.  அதனாலேயே  இந்த தீர்மானங்கள் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று தாம் எதிர்பார்கின்றோம் ” என கூறினார். மேலும், “கிழக்கு கூட்டாவால் இதற்கு மேல் காத்திருக்க முடியாது. பூமியில் இருக்கும் நரகத்தை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். 

ஆகவே எவ்வித தாமதமுமின்றி  30 நாட்கள் தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பை உடனடியாக அமுல்படுத்தி அதனை உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபை  தீர்மானம் வலியுறுத்தியது. பெரும்பான்மை ஆதரவில் இந்த தீர்மானம் அங்கீகாரமும் பெற்றுள்ளது. மருத்துவர்கள் மின்சாரம், மாத்திரைகள், சுவாசக்காற்று பைகள், மயக்க மருந்து, வலி நிவாரணிகள் போன்ற எதுவுமே இல்லாமல் பணியாற்றி வருவதாக ஒருசில சர்வதேச தொண்டு நிறுவனங்கள் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் அல்-ஷிஃபுனியா   நகரத்தில் நடந்த விமான தாக்குதலில் இரசாயன குண்டுகள் போடப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.  குளோரின் வாயு தாக்குதலுக்குள்ளாகி இருக்கும் அறிகுறிகள், சில நோயாளிகளிடம் தென்பட்டதாக தொண்டு நிறுவனங்கள் குற்றம் சுமத்தி வருகின்றன.  இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என சிரிய அரசாங்கம் அடித்துக்கூறுகின்றது. எனினும், 2017ஆம் ஆண்டு ஏப்ரல்  4ஆம் திகதி வட-மேற்கு நகரமான கான் ஷேக்ஹூன் நகரத்தில் நிகழ்ந்த  இரசாயன தாக்குதலுக்கு சிரிய அரசாங்கம்தான் காரணம் என கடந்த ஆண்டு ஒக்டோபரில்  ஐ.நா. திட்டவட்டமாக தெரிவித்தமை  குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அழுத்தமான கோரிக்கையினை அடுத்து ரஷ்ய  அரசாங்கம் சிரியாவுடன் இணக்கம் பெற்றுக்கொண்டு  தினமும் 5 மணிநேர போர் நிறுத்தத்தை கொண்டுவருவதாக தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்தை செய்யும் நோக்கம் ரஷ்யாவிற்கு இல்லை. கடல் மார்க்க ஆயுத தளங்கள் இப்போதே அமைக்கப்பட்டுள்ளன, தொடர்ச்சியாக விமானத் தளங்களும் அமைக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்றன. தமது பலத்தினை வெளிப்படுத்த கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை ரஷ்ய அரசாங்கம் நழுவவிடப்போவதில்லை. 

அமெரிக்காவை பொறுத்தவரை உலகின் எந்த நாட்டிலும் தங்களுக்கு சாதகமான அரசை அமைத்துக்கொள்ள விரும்பும். அதனாலேயே சிரியா புரட்சி படைகளுக்கு ஆயுதமும், பயிற்சியும் வழங்குகிறது.ரஷ்யா, சிரியா அரசுடன்  கடந்த 40 ஆண்டுகளாக நம்பிக்கையான நட்பு நாடாக செயற்பட்டுவருகின்றது.  சிரியாவின் டார்டஸ் துறைமுகத்தில் ரஷ்யாவின் கடற்படை தளம் அமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யா தங்கள் நாட்டுக்கு வெளியே அமைத்துள்ள ஒரே கடற்படை தளம் இதுதான். இக்காரணமே  சிரியாவுக்கு ஆதரவாக செயற்பட்டு  வருகிறது.

இந்த யுத்தத்தின் மூலமாக கிடைத்தவை என்ன? அனைவரிடமும் எழும் கேள்வி இதுவேயாகும்.  2010ஆ-ம் ஆண்டுக்குப் பிறகு 90 சதவிகிதம் அளவுக்கு உற்பத்தி குறைந்துள்ளது. எண்ணெய் உற்பத்தியைப் பொறுத்தவரையில், கடந்த 2010ஆம் ஆண்டுவரை 3,80,000 பீப்பாய் உற்பத்தி செய்த நாடு இன்று வெறும் 10,000க்கும் உட்பட்ட பீப்பாய்  உற்பத்தி செய்கிறது. எண்ணெய் உற்பத்தி பெருமளவில் சரிந்ததால், மின்சார உற்பத்தியும் சரிந்தது. ஒரு நாட்டில் மின் உற்பத்தி இல்லையென்றால், அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியினைக் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். அதுமட்டுமில்லாமல், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அடியோடு குறைந்தது. அதாவது 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சிரியாவில் 11 சதவிகிதம் இளைஞர்கள் வேலையில்லாமல் இருந்த நிலையில்  இன்று 39 சதவிகித இளைஞர்கள் வேலையில்லாமல் தவிக்கின்றனர். இது  போரில் இறந்தவர்களுக்குச் சமமாக  பசியாலும், பட்டினியாலும் மக்கள் இறந்துவருவது குறிப்பிடத்தக்கது. 70 வீதமான மக்கள் பசி பட்டினியில் வாடுகின்றனர். 

ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சில அரபு நாடுகளும் சிரிய விவகாரத்தில் தலையிடாமல் ஒதுங்கி நின்றாலே போதும், அங்கே அமைதி தானாக திரும்பும். தங்களை யார் ஆள வேண்டும் என்பதை மக்கள் மன்றம் தீர்மானிக்கட்டும்.  மரணங்களுக்கு நியாயம் கூற முடியும், அது யதார்த்தமாகவும் ஏன் தத்துவ ரீதியிலும் கூட அமையலாம். ஆனால் படுகொலைகளுக்கு எந்த நியாயமும் பொருந்துவதில்லை. அன்று முள்ளிவாய்க்கால் இன அழிப்பு எந்த நியாயங்களையும் தாண்டி உண்மைகளை கண்டறிய துடிக்கின்றது.  செச்சினியா இன அழிப்பு   இன்றும் கண்முன்னே நிகழ்ந்ததாக உள்ளது.   பாலஸ்தீன் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் சாமானிய அப்பாவி மக்கள் கொத்துக்கொத்தாய் கொன்று குவிக்கப்படுகின்றமையை யாரால் தடுக்க முடிந்தது.  குர்த் இனத்தவரின் வேதனை அழியா வடுக்களாய் தெரிகின்றதே. இவற்றின் மத்தியில்   இன்றும் சிரியாவின் துயரம் முடிவில்லா தொடர்கதையாக....