சினிமாத் துறையின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது.

90ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவை தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் 2ஆவது முறையாக தொகுத்து வழங்கினார். இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இதில் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

"டார்க்ஸ்ட் ஹவர்" படத்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் கேரி ஓல்ட்மேன் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார். "த்ரீ பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் மிசோரி" படத்தில் நடித்த பிரான்சஸ் மிக்டார்மண்ட் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை பெற்றார்.

இதில் சிறந்த துணை நடிகராக சாம் ராக்வெல்லும், சிறந்த துணை நடிகையாக ஆலிசன் ஜேனியும் ஆஸ்கர் விருதை பெற்றுள்ளனர். 

சிறந்த ஒலித்தொகுப்பு மற்றும் ஒலி இணைப்பு விருதுகளை கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய டங்கிர்க் படம் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து சிறந்த படத்தொகுப்பிற்கான விருதும் டங்கிர்க் படத்திற்கே கிடைத்துள்ளது.

சிறந்த வெளிநாட்டு படமாக சிலி நாட்டைச் சேர்ந்த "எ பென்டாஸ்டிக் வுமன்" கைப்பற்றியுள்ளது. சிறந்த அனிமேஷன் படமாக "கோகோ"வும் சிறந்த அனிமேஷன் குறும்படமாக "டியர் பாஸ்கட்பால்" படமும் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. 

"தி ஷேப் ஆஃப் வோட்டர்" படத்திற்கு சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு விருது கிடைத்திருக்கிறது. இதுதவிர ஆடை வடிவமைப்புக்கான விருதை "பாண்டம் த்ரெட்" படமும் ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான விருதை "டார்க்கஸ்ட் ஹார்" படமும் வென்றுள்ளன. 

அதுமட்டுமின்றி சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை "ஐகரஸ்" படம் பெற்றுள்ளது

இந்த ஆண்டு விருதுகளுக்கான போட்டியில் "திரி பில்போர்ட்ஸ் அவுட் சைட் எப்பிங் மிசவுரி" என்ற படம் 7 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டோபர் நோலனின் "டன்கர்க்" திரைப்படம் 8 பிரிவுகளின் கீழ் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. "தி ஷேப் ஆப் வோட்டர்" திரைப்படம் 13 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.