சமையல் என்­ற­வுடன் நமக்கு சட்­டென்று ஞாப­கத்­துக்கு வரு­வது சமையல் எரி­வா­யுதான். நகமும் சதையும் போல சமை­யலும் சமையல் எரி­வாயும் ஒன்­று கலந்­து­விட்­டன என்­று­கூட சொல்­லலாம். அந்­த­ள­விற்கு இன்று பட்­டி­தொட்­டி­யெல்லாம் இந்த சமையல் எரி­வாயு தாக்கம் செலுத்தி வரு­கின்­றது. 

ஆம், அன்று விறகு கொண்டு அடுப்­பெ­ரித்து சமையல் செய்­தார்கள். அந் நிலை இன்று முற்­றாக மாற்­ற­ம­டைந்­துள்­ளது. கிராமப்புறங்­களில் கூட சமையல் எரி­வா­யுவின் பாவனை வெகு­வாக அதி­க­ரித்­துள்­ளது. ஒரு சிலர் மாத்­தி­ரமே விறகு மற்றும் மண்­ணெண்ணெய் கொண்டு சமையல் செய்­கின்­றனர். அதன் விளை­வா­கவே அத்­தி­யா­வ­சிய பொருள் என்ற நிலையை அடைந்­துள்­ளது, இந்த சமையல் எரி­வாயு.

நாட்டின் சமையல் எரி­வாயு விநி­யோ­கத்தில் இரு பிர­தான நிறு­வ­னங்கள் அங்கம் வகிக்­கின்­றன. ஒன்று லிட்ரோ கேஸ் நிறு­வனம். மற்­றை­யது லாப்கேஸ் நிறு­வனம். இவ்விரு நிறு­வ­னங்­களே நாட்டின் சகல பாகங்­க­ளிலும் சமையல் எரி­வாயு விநி­யோ­கத்­தை முன்­னெ­டுக்­கின்­றன. சந்­தையில் 72 சத­வீ­த­மான சமையல் எரி­வாயு விநி­யோ­கத்­தை லிட்ரோ கேஸ் நிறு­வ­னமும் எஞ்­சிய சத­வீ­தத்­தை லாப்கேஸ் நிறு­வ­னமும் கொண்­டுள்­ளது.

2010 ஆம் ஆண்டு வரை 12.5 கிலோ­கிராம் நிறை­யு­டைய சமையல் எரி­வாயு சிலிண்டர் ஒன்றின் விலையில் இந்த இரு நிறு­வ­னங்­க­ளுக்­கு­மி­டையில் வித்­தி­யாசம் காணப்­பட்­டது. அதா­வது லிட்ரோ சமையல் எரி­வா­யுவின் விலையை விட லாப் ­சமையல் எரி­வா­யுவின் விலை குறை­வாகக் காணப்­பட்­டது. ஆனால் 2011 ஆம் ஆண்டு முதல் 12.5 கிலோ­கிராம் நிறை­யு­டைய இவ்­விரு நிறு­வ­னங்­க­ளி­னதும் சமையல் எரி­வா­யு சிலிண்டர்களின் விலை சம­னா­கவே இருந்து வந்­துள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

2010 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 12.5 கிலோ­கிராம் நிறை­யு­டைய சமையல் எரி­வா­யுவின் விலையில் ஏற்­பட்ட மாற்­றங்கள் குறித்து ஆரா­ய்­வோ­மானால் 2010 ஆம் ஆண்டு  லிட்ரோ சமையல் எரி­வா­யு சிலிண்டர் ஒன்றின் விலை 1625 ரூபா­வா­கவும் லாப் சமையல் எரி­வா­யு சிலிண்டர் ஒன்றின் விலை 1520 ரூபா­வா­கவும் இருந்­தன. 2011 ஆம் ஆண்டு லிட்ரோ சமையல் எரிவாயுவின்  விலை 2046 ரூபா வரை உயர்­வ­டைந்­தது. லாப் ­சமையல் எரிவாயுவின்  விலையும் 2046 ரூபா வரை உயர்­வ­டைந்­தது.

2012 ஆம் ஆண்டு சமையல் எரி­வா­யுவின் விலையில் எவ்­வித மாற்­றமும் இடம்­பெ­ற­வில்லை. 2013 ஆம் ஆண்டு 12.5 கிலோ­கிராம் நிறை­யு­டைய லிட்ரோ மற்றும் லாப் ஆகிய சமையல் எரி­வா­யு சிலிண்டர்களின் விலை 2796 ரூபா வரை உயர்­வ­டைந்­தது. 2014 ஆம் ஆண்டு இந்த இரு எரி­வா­யுக்­க­ளி­னதும் விலை 455 ரூபாவால் குறைக்­கப்­பட்­டது. அதா­வது 2341 ரூபா வரை குறைக்­கப்­பட்­டது. அதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு மேலும் 995 ரூபா விலை குறைக்­கப்­பட்­டது. அத­ன­டிப்­ப­டையில் 12.5 கிலோ­கிராம் நிறை­யு­டைய சமையல் எரி­வா­யுவின் விலை 1346 ரூபா­வா­னது.

2016 ஆம் ஆண்டு குறித்த நிறை­யு­டைய சமையல் எரி­வா­யுவின் விலை 1321 ரூபா வரை குறை­வ­டைந்­தது. 2010 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை­யான காலப்­ப­கு­தியில் தொடர்ச்­சி­யாக சமையல் எரிவாயுவின் விலை அதி­க­ரிக்­கப்­பட்­டது. 2012 ஆண்டு விலை குறைக்­கப்­ப­ட­வு­மில்லை.  அதி­க­ரிக்­கப்­ப­ட­வு­மில்லை.

2010 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை­யான காலப்­ப­கு­தியில் 12.5 கிலோ கிராம் நிறை­யு­டைய லிட்ரோ சமையல் எரி­வா­யுவின் விலை 1171 ரூபாவால் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அதா­வது 1625 ரூபா­வி­லி­ருந்து 2796 ரூபா வரை உயர்­வ­டைந்­துள்­ளது.

அதே­போன்று 2010 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை­யான காலப்­ப­கு­தியில் 12.5 கிலோ கிராம் நிறை­யு­டைய லாப் சமையல் எரி­வா­யுவின் விலை­யா­னது 1276 ரூபாவால் உயர்­வ­டைந்­துள்­ளது. அதா­வது 1520 ரூபா­வா­லி­ருந்து 2796 ரூபா வரை உயர்­வ­டைந்­துள்­ளது.

2013 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை லிட்ரோ மற்றும் லாப் ஆகிய சமையல் எரி­வா­யுக்களின்  விலை தொடர்ச்­சி­யாகக் குறை­வ­டைந்து வந்­துள்­ளது. அதன் அடிப்­ப­டையில்  பார்க்­கின்­ற­போது இந்த கால­எல்­லையில் 12.5 கிலோ கிராம் நிறை­யு­டைய லிட்ரோ மற்றும் லாப் சமையல் எரி­வா­யுவின் விலை 1475 ரூபா­வால் குறை­வ­டைந்­துள்­ளது. அதா­வது 2796 ரூபா­வா­லி­ருந்து 1321 ரூபா­வரை குறை­வ­டைந்­துள்­ளது. பின்னர் 2017 ஆம் ஆண்டு குறித்த நிறை­யு­டைய லாப் மற்றும் லிட்ரோ சமையல் எரி­வா­யுக்களின்  விலை­யா­னது 110 ரூபாவால் உயர்­வ­டைந்­தது. அத­ன­் அடிப்­ப­டையில் தற்­போது 12.5 கிலோ­கிராம் நிறை­யு­டைய லிட்ரோ மற்றும் லாப் ஆகிய இரு சமையல் எரி­வா­யுக்களின் விலையும் 1431 ரூபாவுக்கு விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இவ்­வா­றான நிலை­யி­லேயே சமையல் எரி­வா­யுவின் விலை­யினை 300 ரூபா முதல் 400 ரூபா வரையில் அதி­க­ரிக்­கு­மாறு லிட்ரோ மற்றும் லாப் ஆகிய இரு சமையல் எரி­வாயு நிறு­வ­னங்களும் நுகர்வோர் அலுவல்கள் அதி­கார சபை­யிடம் கோரிக்­கை­யினை முன்­வைத்­துள்­ளன.

சமையல் எரி­வாயு விலை அதி­க­ரிப்பு குறித்து நிறு­வ­னங்கள் முன்­வைத்­துள்ள கோரிக்­கை­யினை ஆராய்ந்து வரும் வாழ்க்கைச் செலவுக்குழு உலக சந்­தையின் சமையல் எரி­வா­யுவின் விலை மற்றும் இலங்கை சந்­தையில் சமையல் எரி­வா­யுவின் விலை போன்­ற­வற்றை ஆராய்ந்து அறிக்­கை­யொன்­றை வழங்­கு­மாறு நுகர்வோர் அலுவல்கள் அதி­கார சபைக்கு பணிப்­புரை விடுத்­துள்­ள­தாக வாழ்க்கைச் செலவுக்குழு தெரி­வித்­துள்­ளது. எனவே சமையல் எரி­வா­யுவின் விலை மீண்டும் அதி­க­ரிக்­கப்­ப­டுமா என்ற வியப்­புடன் மக்கள் இருக்­கின்­றனர்.

இது தொடர்­பாக லிட்ரோ கேஸ் நிறு­வ­னத்தின் விற்­பனைப் பிரிவு பணிப்­பா­ளரும் நிறு­வன தொடர்­பா­ள­ரு­மான சமிந்த எதிரி விக்­கி­ரம கருத்து தெரி­விக்­கையில், 'எல்.பி.கேஸ்' சமையல் எரி­வா­யு என்­பது அத்­தி­யா­வ­சிய பொரு­ளாக வர்த்­த­மா­னியில் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. எனவே சமையல் எரி­வா­யுவின் விலை­யினை நிறு­வ­னங்கள் தமது  விருப்­பத்­துக்கேற்ப நிர்­ண­யிக்க முடி­யாது. நுகர்வோர் மற்றும் நிறு­வ­னங்­களின் நிலை­மை­யை ஆராய்ந்து, நுகர்வோர் அலுவல்கள் அதி­கார சபையே சமையல் எரி­வா­யுவின் விலை­யைத் தீர்­மா­னிக்கும்.

எரி­வா­யுவின் விலை­யைத் தீர்­மா­னிப்­பதில் நடை­மு­றை­யொன்று காணப்­ப­டு­கி­றது. ஆனால் அது தற்­போது செயற்­பாட்டில் இல்­லை­யென்றே கூற­வேண்டும். விலை சூத்­தி­ரத்தின் அடிப்­ப­டை­யி­லேயே விலைக்­கு­றைப்பு மற்றும் விலை அதி­க­ரிப்பு இடம்­பெறும். இதில் பல கார­ணிகள் செல்­வாக்கு செலுத்­து­கின்­றன. முத­லா­வ­தாக உல­க­சந்­தையில் காணப்­படும் சமையல் எரி­வா­யுவின் விலை, இரண்­டா­வது இறக்­கு­ம­தியின் போது காணப்­படும் கப்பல் கட்­டணம் போன்ற இன்­னோ­ரன்ன கார­ணிகள் இதில் செல்­வாக்குச் செலுத்­து­கின்­றன.

சில சம­யங்­களில் உலக சந்­தையில் எரி­வாயு விலை குறை­வ­டையும். அதே போன்று அதி­க­ரிக்கும். கப்பல் கட்­ட­ணமும் அப்­ப­டியே. இவை­யெல்­லா­வற்­றையும் கருத்தில் கொண்­டுதான் கடந்த 8 வரு­டங்­க­ளுக்கு முன்னர் விலை சூத்­திரம் அறி­முகம் செய்­யப்­பட்­டது. இவ் விலை சூத்­தி­ரத்­துக்கமைய சந்­தையின் நிலை­மை­களை கருத்­திற்­கொண்டு சமையல் எரி­வாயு நிறு­வ­னங்கள் விலை மாற்றம் குறித்த கோரிக்­கை­யினை முன்­வைக்கும். அதனை ஆராய்ந்து நுகர்வோர் அலுவல்கள் அதி­கார சபை எரி­வா­யுவின் விலை­யை நிர்­ண­யிக்கும்.

சந்­தையின் நிலை­மை­யைக் கருத்­திற்­கொண்டு விலை அதி­க­ரிப்பைக் கோரும் உரிமை எமக்கு உண்டு. அத­ன­டிப்­ப­டையில் கடந்த மாதம் நாம் சமையல் எரி­வா­யுவின் விலையை அதி­க­ரிக்­கு­மாறு கோரிக்­கை­யினை முன்­வைத்தோம். இறுதித் தீர்­மானம் எடுக்கும் உரிமை அதி­கார சபை­யி­டமே உள்­ளது. உண்­மையில் நாம் நெருக்­க­டி­யான சூழ்­நி­லை­யி­லேயே இருக்­கின்றோம். எனவே இவற்றை கருத்திற்கொண்டு நியா­ய­மான தீர்­வினை  நுகர்வோர் அலுவல்கள் அதி­கா­ர­சபை வழங்­கு­மென எதிர்­பார்க்­கின்றோம் என்றார்.

இது குறித்து நுகர்வோர் அலுவல்கள் அதி­கா­ர­ச­பையின் தலைவர் ஹசித்த திலக்­க­ரத்ன கருத்து தெரி­விக்­கையில், 

சமையல் எரி­வாயு அத்­தி­யா­வ­சிய பொரு­ளாக கரு­தப்­ப­டு­கி­றது. இதன் விலையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தென்றால் நுகர்வோர் அலுவல்கள் அதி­கார சபையின் அனு­ம­தி­ பெற­வேண்டும். சாதா­ர­ண­மாக பொருட்­களின் விலை­யினை அதி­க­ரிப்­ப­தற்கு அனு­மதி கோரி எமக்கு விண்­ணப்­பங்­களை அனுப்­பு­வ­துண்டு. அவற்றை நாம் பரி­சீ­லனை செய்து அவர்­களின் கோரிக்கை நியா­ய­மா­னதா இல்­லையா என நிர்­ணயம் செய்வோம். இத் தீர்­மானம் எமது  குழுவால் கலந்­து­ரை­யா­டியே எடுக்­கப்­படும்.

அத­ன­டிப்­ப­டையில் சமையல் எரி­வா­யுவின் விலை­யினை அதி­க­ரிக்க அனு­மதி தரு­மாறு சமையல் எரி­வாயு நிறு­வ­னங்கள் எம்­மிடம் கோரிக்­கை­யினை முன்­வைத்­துள்­ளன.  நாம் அது தொடர்பில் ஆராய்ந்து வரு­கின்றோம். சமையல் எரி­வா­யுவின் விலை அதிகரிப்பானது. நுகர்வோருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கத்தை செலுத்தக்கூடியது ஆகையால் நன்றாக ஆராய்ந்து இருதரப்பும் பாதிக்காத வகையிலான தீர்மானத்தினையே எடுக்கவேண்டும். ஆனால் இதுவரையில் விலை அதிகரிப்பு குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.சமையல் எரிவாயுவின் விலைஅதிகரிக்கப்படுமானால் அது அனைத்துத் தரப்பினருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. சாதாரணமாக நாம் ஹோட்டல்களில் அருந்தும் தேநீர் கோப்பை முதல் அப்பம், சோறு என எல்லாப்பொருட்களினதும் விலைகளில் அது தாக்கம் செலுத்தும். ஆகையால் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்குமா என்பதை எல்லோரும் அவதானித்த வண்ணமேயுள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம் சமையல் எரிவாயுவின் விலை மீண்டும் எகிருமா என்று.