தேர்தல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் இரண்டுமாத காலப்பகுதியில் நடத்தப்பட்டு, நாட்டிலுள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில்களைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை அடுத்த ஆறுமாத காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

புதிய கல்விக்கொள்கைகள் மற்றும் திட்டங்களின்படி கல்வி முறைமையில் சில மாற்றங்களை செய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது.  நாட்டின் கல்வி முறைமையில் உள்ள குறைபாடுகளின் காரணமாக நாட்டின் வளமான பட்டதாரிகள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் தொழில் உட்பட ஏனைய அரச நிறுவனங்களில் உள்ள வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்யும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

நீண்டகாலமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று வந்த யுத்தத்தின் காரணமாக பின்னடைந்திருந்த அபிவிருத்தி நடவடிக்கைகளை வினைத்திறன்மிக்க வகையில் முன்னெடுப்பதற்கு இரண்டு விசேட ஜனாதிபதி படையணிகளை தாபிப்பதற்கு நான்  நடவடிக்கை எடுத்துள்ளேன்.  அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி மக்கள் பிரதிநிதிகளின் உதவியை இதில் நான் எதிர்பார்கின்றேன்.  மேலும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திட்டங்களை துரிதப்படுத்துவது குறித்து ஆராயவுள்ளதாகவும் ஜனாதிபதி  தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வுகூடங்களுக்கு தேவையான உபகரணங்களை பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 3 பாடசாலைகளுக்கான உபகரணங்களை ஜனாதிபதி  வழங்கிவைத்தார். கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, இராஜாங்க அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, சிறியாணி விஜேவிக்கிரம, பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாச கலப்பத்தி, தலைமைச் செயலாளர் சரத் அபே குணவர்தன, பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.