(எம்.சி.நஜிமுதீன்)

ஆள் பரிமாற்றம் குறித்து இலங்கைக்கும் சிங்கப்பூருக்குமிடையில் எவ்வித உடன்படிக்கைகளும் இல்லை. எனவே மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவது கடினம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பிரிஸ் தெரிவித்தார்.

Image result for ஜீ.எல்.பீரிஸ் virakesari

மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்து அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

மத்திய வங்கி பிணைமுறி மோசடியானது எமது நாட்டில் இடம்பெற்ற பாரியளவான நிதி மோசடியாகும். அம்மோசடிக்கும் பிரதமருக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. மேலும் குறித்த மோசடி உரிய திட்டமிடலுடன் முன்னெடுக்கப்பட்டதாகும். மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கலின் போது இருமுறை மோசடி இடம்பெற்றுள்ளது.  அதனால் நாட்டின் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

மேலும் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் அவர் தற்போது சிங்கப்பூர் முகவரியிலும் இல்லையென தெரியவந்துள்ளது. அத்துடன் ஆள் பரிமாற்றம் குறித்து இலங்கைக்கும் சிங்கப்பூருக்குமிடையில் உடன்படிக்கை ஏதும் இல்லை. ஆகவே அவரைத் தேடிக்கண்டுபிடிப்பது இலகுவான விடயமல்ல.  மேலும் அவரைக்கண்டு பிடித்து நீதிமன்றின் முன் நிறுத்தாத வரையில் மத்திய வங்கி பிணைமுறி மோசடிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க முடியாதெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.