குழந்தைகளுக்கு  குறைந்தது  6  மாத காலம் அல்லது அதற்குக் கூடிய காலம் தாய்ப்பாலூட்டுவது  பெண்களுக்கு இருதய  நோய்கள் ஏற்படுவதை 15  வருடங்களால் தாமதப்படுத்துவதாக  அமெரிக்க  பிட்ஸ்பேர்க்  பல்கலைக்க ழகத்தைச் சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட பிந்திய ஆய்வு தெரிவிக்கிறது.

மேற்படி ஆய்வின் முடிவுகள் நேற்று முன்தினம் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

தாய்ப்பாலூட்டுவது பெண்களின் குருதிச்சுற்றோட்டத்திலான கொழுப்பின் அளவைக் குறைப்பதுடன் குருதியிலான கொலஸ்திரோல் மட்டத்தை    உடல் நலத்திற்கு நன்மை தரும்  வகையில்  பேணுவதாக  மேற்படி ஆய்வுக்கு தலைமை தாங்கிய மருத்துவ கலாநிதி மலாமோ கவுன்டோரிஸ் தெரிவித்தார்.

அத்துடன் தாய்ப்பா லூட்டுவது  குருதிக்குழாய்கள்  உட்புறமாக தடிப்பமடைவதைத் தடுத்து  தலைக்கும் கழுத்திற்கும் ஒட்சிசன் செறிவுடைய  குருதி சீராக விநியோகிக்கப்படுவதற்கு  வழிவகை செய்வதாக  அவர் கூறினார். மேற்படி குருதிச் சுற்றோட்டம் பாதிக்கப்படுவது பாரிசவாதம் ஏற்படுவதற்கு காரணமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமது ஆய்வில்  தாய்ப்பால் சுரப்பானது குழந்தைக்கு மட்டுமல்லாது தாயின் உடல்நலத்திற்கும்  முக்கியத்துவம் மிக்கதாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக  மருத்துவ கலாநிதி மலாமோ தெரிவித்தார்.

அத்துடன் தாய்ப்பா லூட்டுவது  பெண்களில் ஒக்ஸிரொக்ஸின் ஓமோனின் சுரப்பை சீர்செய்து  அவர்களின் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக    மேற்படி ஆய்வில் பங்கேற்ற ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.