(ரொபட் அன்டனி)

மத்திய வங்கியின்  முன்னாள் ஆளுநர்  அர்ஜுன மகேந்திரனை எங்கிருந்தாலும் இலங்கைக்கு அழைத்து வருவோம்.  உதயங்க வீரதுங்கவையும் அழைத்து வருவோம் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான  ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.  

அரசாங்கத் தகவல்  திணைக்களத்தில் இன்று நடைபெற்ற   வாராந்த  அமைச்சரவை முடிவுகளை  அறிவிக்கும்  செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு  கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அமைச்சர் அங்கு மேலும்  குறிப்பிடுகையில்;  

கேள்வி: அர்ஜுன மகேந்திரனுக்கு நீதிமன்ற  அறிவித்தலை வழங்கமுடியாமல் போயுள்ளதே?

 பதில்:  அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாங்கள் ஆராய்கின்றோம். குறிப்பாக  சிவப்பு அறிவித்தலை  வெளியிடுவதற்கு  நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் நீங்கள் கடந்த காலத்தில் இடம்பெற்ற  கொலை, கொள்ளைகள்  தொடர்பில் கேள்வி எழுப்புவதில்லை. மாறாக  இந்த அரசாங்கத்தில் இடம் பெற்ற விடயங்களையே கிளறுகின்றீர்கள். அர்ஜுன மகேந்திரனின் காட்டும்  அக்கறை உதயங்கவின்   விடயங்களில் காட்டவில்லையே . 

கேள்வி  தாமதம் உங்கள் பக்கம் அல்லவா உள்ளது? 

பதில்  இங்கு எதுவுமே ஒழங்காக இல்லை.  தாஜுடீன் விவகாரத்தில் அறிக்கைகளை காணவில்லை.  எலும்புக்கூடுகளையும் காணவில்லை.  மருத்துவ அறிக்கையையும் காணவில்லை.  எனவே  அனைத்தையும் புதிதாக  ஆரம்பிக்கவேண்டியுள்ளது. 

கேள்வி: உதயங்க எப்போது அழைத்து வரப்படுவார்?

பதில்: அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி: முகவரி இல்லாத  அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவந்து   மத்திய வங்கி ஆளுநராக நியமித்து இலங்கையின் முகவரியை   இல்லாமல் செய்துவிட்டதாக கூறப்படுகின்றதே?

பதில் : அப்படியாயின் உதயங்க வீரதுங்கவை வெளிநாட்டுக்கு அனுப்பி  இலங்கையின் முகவரியை இல்லாமல் செய்தது சரியானதா?

கேள்வி: அர்ஜுன மகேந்திரனை எப்போது அழைத்து வருவீர்கள்?

பதில்: அவரை எப்படியாவது அழைத்து வருவோம்.