மும்பை ஸ்போர்ட்ஸ் கிளப்பிலிருந்து ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலம் ஆரம்பமானது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.

மகாராஷ்டிர மாநில அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. பிற்பகல் 3.30 மணியளவில் மும்பை வில்லிபார்லியில் உள்ள மின் மயானத்தில் ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

டுபாயில் திருமண நிகழ்வொன்றுக்குச் சென்ற அவர்  கடந்த 24 ஆம் திகதி உயிரிழந்தார். 

உறவினர் இல்லத் திருமணத்தில் பங்கேற்ற அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக முதலில் கூறப்பட்டது.

டுபாயில் உள்ள ஜுமைரா எமிரேட்ஸ் டவர்ஸ் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அவர் உடல் ரஷீத் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவர் மாரடைப்பால் உயிரிழக்கவில்லை என்பது தெரியவந்தது.

தடயவியல் பரிசோதனை மற்றும் போனிகபூரிடம் பொலிஸார் விசாரணை நடத்திய பிறகு அவர் ஓட்டல் குளியலறையில் உள்ள தொட்டிக்குள் மயங்கி விழுந்து மரணம் அடைந்து இருப்பது தெரியவந்தது. மேலும் அவரது ரத்தத்தில் சற்று ஆல்கஹால் கலந்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பொலிஸார் ஸ்ரீதேவி மரணம் குறித்த விசாரணையை மாஜிஸ்திரேட் விசாரணைக் குழுவினரிடம் ஒப்படைத்தனர். டுபாய் அரசின் மூத்த வக்கீல் ஒருவர் ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரிடம் விசாரணை நடத்தினார். போனி கபூரின் வாக்குமூலம் எழுத்துப் பூர்வமாக பெறப்பட்டது.

இதனால் ஸ்ரீதேவி உடல் டுபாயில் இருந்து மும்பை கொண்டு வரப்பட தாமதம் ஏற்பட்டது. நேற்று மாஜிஸ்திரேட் குழு விசாரணை முடிந்தது. சட்ட நடைமுறைகள் அனைத்தும் முடிந்த நிலையில் நேற்று  ஸ்ரீதேவியின் உடல் போனிகபூர், அவரது மகன் அர்ஜுன் கபூரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து மூன்று நாட்களுக்கு பிறகு ஸ்ரீதேவியின் உடல் நேற்றிரவு 10 மணிக்கு டுபாயில் இருந்து மும்பை வந்து சேர்ந்தது.

மும்பை விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீதேவி உடல் அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள லோகண்ட்வாலா வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. நேற்றிரவு அவர் உடலுக்கு போனிகபூர் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

இன்று காலை 9 மணியளவில் ஸ்ரீதேவி உடல் லோகண்ட் வாலாவில் உள்ள “செலிபிரே‌ஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்”புக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது.

இன்று அதிகாலையில இருந்தே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டு இருந்தனர். அவர்கள் வரிசையாக சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

நடிகைகள், ஹேமமாலினி, ஐஸ்வர்யாராய், ஜெயா பச்சன், ஜெயப்பிரதா, சுஷ்மிதா சென், மாதுரிதீட்சித், சோனம் கபூர், தபு, கஜோல், நடிகர்கள் அஜய்தேவ்கான், அக்‌ஷய்கன்னா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

ஸ்ரீதேவி உடலுக்கு அஞ்சலி செலுத்த இந்தி திரை உலகைச் சேர்ந்தவர்கள் ஏராளமாக திரண்டு வந்திருந்தனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் திணறினார்கள். ரசிகர்கள் கைதொலைபேசி, காமிரா எடுத்து வர தடை விதிக்கப்பட்டிருந்தது.

இடையிடையே திரை உலக பிரபலங்களும் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். நண்பகல் 12.30 மணி வரை ரசிகர்கள் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.

நண்பகல் ஒரு மணிக்கு ஸ்ரீதேவி உடலுக்கு போனி கபூர் குடும்பத்தினர் இறுதிச் சடங்குகள் நடத்தினார்கள். சுமார் ஒரு மணி நேரம் அந்த சடங்குகள் நீடித்தது. 2 மணிக்கு பிறகு ஸ்ரீதேவி இறுதி ஊர்வலம் தொடங்கியது.

ஸ்ரீதேவி உடலை தகனம் செய்ய மும்பை வில்லேபார்லி மேற்கு பகுதி யில் எஸ்.வி.சாலையில் உள்ள வில்லே பார்லி சேவா சமாஜ் தகன மையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3.30மணிக்கு ஸ்ரீதேவி உடல் தகனம் செய்யப்படுகிறது.

மாநில அரசின் மரியாதையுடன் அவர் உடல் தகனம் நடைபெறும். இதற்காக மும்பை பொலிஸ் பேண்டு வாத்திய குழு சோக இசை முழங்கியபடி தகனம் செய்யயும் இடத்திற்கு சென்றடைந்தது.