அமைச்சரவையின் கீழ் வரும் பொருளா தார   முகாமைத்துவ  குழுவினை கலைக்க வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தி யுள்ளார். ஜனாதிபதியின் இந்த நிலைப்பாடு குறித்து பிரதமர் ரணில் விக்கிரம சிங்க உட்பட அமைச்சர்கள் விளக்கமளித்ததையடுத்து அமைச்சரவையில் பெரும் இழுபறி நிலை ஏற்பட்ட போதிலும் இந்த விடயம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்   ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுக்காலை  இடம்பெற்றது.  அமைச்சரவை மாற்றம்  இடம்பெற்றதன் பின்னர்  நடைபெற்ற  முதலாவது  அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட  பெருமளவான அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.   

இதன்போது   அமைச்சரவையின் கீழ் வரும் பொருளாதார முகாமைத்துவ  குழுவினை  கலைக்கவேண்டியதன் அவசியம் குறித்து  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன   வலியுறுத்தியுள்ளார்.  பொருளாதார  விடயங்கள் எதுவாயினும் அது குறித்து அமைச்சரவையில் ஆராய்ந்து  அமைச்சரவையில் முடிவு எடுக்கப்படும்.   இதனைவிடுத்து   இவ்விடயங்களை பொருளாதார முகாமைத்துவ    குழுவிற்கு சமர்ப்பித்து    ஆராய்ந்து  அதன் பின்னர் அமைச்சரவைக்கு  சமர்ப்பிப்பது என்பது   தேவையற்றதொரு விடயமாகும்.  அமைச்சரவைக்கு மேலும்  ஒரு குட்டி அமைச்சரவை  தேவையற்றது என்று ஜனாதிபதி  இங்கு சுட்டிக்காட்டியுள்ளார். 

பொருளாதார  முகாமைத்துவ  குழு தொடர்பில்  ஐக்கிய தேசியக்கட்சி அமைச்சர்களே  என்னிடம் பலதடவைகள் முறைப்பாடுகளை தெரிவித்துள்ளனர்.   இந்தக்குழுவானது  முதலீட்டாளர்களை வரவழைப்பதாக கூறி எம்மை  ஏமாற்றிவருகின்றது.  குளியாப்பிட்டியில் வொக்செக்கன் கார்  தயாரிக்கும்  கம்பனி உருவாக்குவதாகவும்   களுத்துறையில்   டயர் உற்பத்தி நிலையத்தை உருவாக்குவதாகவும் எம்மை அழைத்து சென்று அவர்கள்  அவமானப்படுத்தினார்கள். இத்தகைய செயற்பாடுகள்  ஜனாதிபதியான எனக்கும்  பிரதமரான உங்களுக்கும்  அவமானத்தை  ஏற்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது.  எனவே இந்த குழுவின்  செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் என்றும் ஜனாதிபதி  அமைச்சரவைக் கூட்டத்தின் போது  வலியுறுத்தியுள்ளார். 

ஜனாதிபதியின்  நிலைப்பாடு தொடர்பில்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க   விளக்கம் அளித்துள்ளார். 

அமைச்சரவைக்கூட்டத்தில்  அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுக்களை மேற்கொள்ள முடியாது.  இதனால்தான் பொருளாதார  விடயங்களை  பொருளாதார முகாமைக்குழுவிற்கு சமர்ப்பித்து   அதன்மூலம்  நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்று பிரதமர்  விளக்கம்  அளித்துள்ளார். 

பிரதமருக்கு ஆதரவாக  அமைச்சர்களான   மலிக் சமரவிக்கிரம, மங்கள சமரவீர  ஆகியோரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 

ஜனாதிபதியின் கருத்துக்கு ஆதரவாக  அமைச்சர் ராஜித சேனாரட்ன கருத்து கூறியுள்ளார்.  சுமார் ஒருமணிநேரம் இந்த விடயம் குறித்து   வாதப் பிரதிவாதங்கள்   இடம்பெற்றன.  இவ்வாறான இழுபறி நிலையில்   இந்த விவகாரம் குறித்து   தீர்மானம் எதுவும் எடுக்கப்படாமலேயே   அமைச்சரவைக் கூட்டம்  நிறைவடைந்துள்ளது. 

2015 ஆம் ஆண்டு  நல்லாட்சி அரசாங்கம் பதவி  ஏற்றதையடுத்து   அமைச்சரவையின் கீழ்   பொருளாதார விடயங்களை கையாள்வதற்கு   பொருளாதார முகாமைத்துவக் குழு  அமைக்கப்பட்டது.   இந்தக் குழுவில்   பிரதமரின்  ஆலோசகர்  பாஸ்கர சிங்கம் உட்பட  பலரும் அங்கம் வகிக்கின்றமை  குறிப்பிடத்தக்கதாகும்.