கோத்தபாய ராஜபக் ஷவை பிரதமராக்கி தொடர்ந்தும் ஜனாதிபதி அதிகாரத்தை தக்கவைக்கவே மைத்திரிபால சிறிசேன முயற்சித்தார் என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் பிமல் ரத்நாயக்க எம்.பி தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தால் மக்கள் விடுதலை முன்னணி ஆதரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

இங்கிலாந்து பயணமாகியுள்ள மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் பிமல் ரத்னாயக அங்கு பி.பி.சி சேவைக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த அரசாங்கம் செய்துள்ள அமைச்சரவை மாற்றம் மிகவும் மோசமானதாகும். கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் சகல வேலைத் திட்டங்களும் மோசடிகளுடன் கூடியவையாகும். இந்த கூட்டணயில் அனைவரும் "ஜோக்கர்கள்" மட்டுமே உள்ளனர். இந்த அமைச்சசரவை மாற்றம் பெற்றுள்ளது என்றதால் மாற்றங்கள் ஏற்படப் போவதில்லை. குறிப்பாக இளைஞர் விவகாரஅமைச்சர் சாகல ரத்னாயக்கவிற்கு வழங்கப்பட்டுள்ளது. 

அதனால் இந்த நாட்டில் இளைஞர் அபிவிருத்தி எதுவும் இடம்பெறப்போவதில்லை. அதேபோல் சட்டம் ஒழுங்கு அவரிடம் இருந்து பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதிலும் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இருவரும் ஒரே விடயத்தையே செய்து வருகின்றனர். முக்கிய ஊழல் குற்றவாளிகள் அனைவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இனியும் தண்டிக்கப்படப்போவதில்லை. ஊழல் குற்றவாளிகளை தண்டிக்கும் நடவடிக்கை தனிப்பட்ட ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது. 

மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி அவரது தனிப்பட்ட வெற்றி மட்டும் அல்ல, கடந்த கால ஊழல் மோசடிகள் குறித்து மக்கள் கொண்டுருந்த அதிருப்தியின் விளைவேயாகும். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார். தான் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை இல்லாதொழிக்க செயற்படுவதாக குறிப்பிட்டார்.   மீண்டும் அவர் ஜனாதிபதியாக களமிறங்கப்போவதில்லை என்ற கருத்துக்களை குறிப்பிட்டார். எனினும் மூன்று ஆண்டுகளில் அவரது செயற்பாடுகள் சுயநலமான போக்கினை கொண்டுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாக்குகள் மஹிந்த ராஜபக் ஷவிடம் உள்ளன என்பதை அவர் நன்கு அறிவார். அதனால் தான் மீண்டும் அவர்களை இணைத்துக்கொண்டு அதிகாரத்தை தக்கவைக்க  முயற்சித்து வருகின்றமை தெளிவாகத் தெரிவிகின்றது. ராஜபக் ஷ குடும்பத்தின் சிலரை தக்கவைக்க முயற்சித்து வருகின்றார். 

குறிப்பாக கோத்தபாய ராஜபக்ஷ  போன்றவர்களை தன்னுடன் இணைத்துக்கொண்டு செல்ல அவர் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார். குறிப்பாக கோத்தபாய ராஜபக் ஷவை பிரதமராக நியமித்து ஆட்சியை கொண்டுசெல்லவே அவர் திட்டம் தீட்டியுள்ளார். தான் மீண்டும் ஜனாதிபதியாக ஆட்சியை தக்கவைக்க முயற்சித்து வருகின்றார். அதனால் தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊழல் வாதிகளை தன்னுடன் இணைத்துக்கொண்டு தனது இருப்பினை தக்கவைக்க முயற்சித்து வருகின்றார். ஐக்கிய தேசியக் கட்சியும் தனி அரசாங்கம் குறித்து சிந்தித்து வருகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் அதனையே முயற்சித்து வருகின்றது. அதில் மஹிந்த ராஜபக் ஷவை இணைத்துக்கொண்டு பயணிக்க முயற்சித்து வருகின்றனர். எனினும் இவர்கள் எவருக்கும் நாம்   ஆதரவு வழங்கப்போதில்லை. 

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்றது. இதில் இலங்கையை பொறுத்தவரை பௌத்தத்துக்கு  முக்கிய இடம் உள்ளது. ஆனால் ஏனைய சகல மதங்களுக்கும் அதே சம உரிமை வழங்கப்பட வேண்டும். இப்போதுள்ள அரசியல் அமைப்பில் பௌத்தத்துக்க   முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்பதற்காக ஏனைய மதங்கள் பாதிக்கப்படவில்லை. ஆகவே தொடர்ந்தும் இருக்கலாம். எவ்வாறு இருப்பினும் சகல மக்களின் ஆதரவினையும்  பெற்றுக்கொண்டு புதிய அரசியல் அமைப்பினை அங்கீகரிக்க வேண்டும். எனினும் இலங்கை சிங்கள பெளத்த நாடு அல்ல. சகல மதங்களுக்கும்  உரிமை உள்ளது. சிங்கள மக்களுக்கு உரிமை உள்ளது எனக் கூறி ஏனைய மக்களை புறக்கணிக்க முடியாது. சிங்களவர்கள் தமிழர்களை அழிக்க முயற்சித்தன விளைவே 30 ஆண்டுகால யுத்தம். தமிழர்கள் சிங்களவர்களை நிராகரித்த காரணமே  தான் 2007 ஆம் ஆண்டு அழிவாகும். இந்த யுத்தத்தில் அரசியல்வதிகள் எவரது பிள்ளைகளும் அழியவில்லை. அழிந்தது சாதாரண மக்களே.யாவர்.  அதனை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். 

மேலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாம் ஆதரவு இல்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக  நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரும் நிலையில் மக்கள் விடுதலை முன்னணி ஆதரிக்கும். ஐக்கிய தேசியக் கட்சியின் ஊழல் செயற்பாடுகள் அனைத்தையும் நாமே கோப் குழுவின் மூலம் வெளிப்படுத்தினோம். நாம் ஐக்கிய தேசியக் கட்சியினை காப்பாற்ற நினைத்திருந்தால் கோப் அறிக்கையினை மூடி மறைத்திருக்க முடியும். 

ஆனால் நாம் ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்க வேண்டிய  அவசியம் இல்லை. நாம் மக்களுக்காக செயற்படும் கட்சியாக மக்கள் சேவையினை செய்து முடிக்கின்றோம். தேசிய அரசாங்கம் தோற்கடிக்கப்பட வேண்டும் ஆனால் அடுத்த அணிக்கு இனியொருபோதும் நாம் ஆதரவு வழங்கப்போவதில்லை. நாம் சுயாதீனாமாக களமிறங்குவோம்  .