திடீரென வீசிய சுழல் காற்றினால் அட்டன் தலவாக்கலை உள்ளிட்ட பல பகுதிகளில் 57 குடியிருப்புகள் சேதமாகியுள்ளதுடன்  இலங்கை போக்குவரத்து  சபையின் அட்டன் டிப்போவும் சேதமாகியுள்ளது.

நேற்றிரவு தீடிரென ஏற்பட்ட மழையுடன் கூடிய சுழல்காற்றினால் குடியிருப்புகளின் கூரைகள் அள்ளுண்டு சென்றுள்ளன.

தலவாக்கலை – கிரேட்வெஸ்டன் தோட்டம் லூசா, ஸ்கல்பா, மலைத்தோட்டம் ஆகிய பிரிவுகளில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அங்குள்ள 50 ற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ள நிலையில் வீட்டு உபகரணங்களும் சேதமாகியுள்ளன.

பாதிக்கப்பட்ட 50ற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 150 ற்கும் மேற்பட்டோர் தோட்டத்திலுள்ள அவர்களின் உறவினர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகம் செய்து வருவதோடு, மாற்று நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. மேலும் அட்டன் டன்பார் பகுதியில் 6 வீடுகளின் கூரைப்பகுதிகள் பாதிப்படைந்துள்ளதுடன் அட்டன் காமிபுர பகுதியில் குடியிருப்பொன்றும் அட்டன் டிப்போவின்  கூரை காற்றினால் அள்ளுண்டு அங்கு தரித்து நின்ற காரின் மேல் வீழ்த்துள்ளமையினால் கார் சேதமாகியுள்ளது.