அமெரிக்காவில் முதல் தடவையாக முழு நேர தொலைக்காட்சி  அறிவிப்பாளராக  பணியாற்றும் முக்காடு அணிந்த  முஸ்லிம் பெண் என்ற  பெயரை  தஹெரா ரஹ்மான் பெறுகிறார்.

 இலினொயிஸ் மாநிலத்திலுள்ள ரொக் தீவில்  சி.பி.எஸ். தொலைக்காட்சி சேவையுடன் இணைந்து செயற்படும் டபிள்யூ.எச்.பி.எப். தொலைக்காட்சி சேவையின் முழு நேர  அறிவிப்பாளராக  அவர் (27  வயது)  நியமனம் பெற்றுள்ளார்.

 ஏற்கனவே அந்த தொலைக்காட்சி சேவையில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக  இரு வருட காலம் பணியாற்றியிருந்த அவர்,   புகைப்படக்கருவிக்கு முன் முழு நேர பணியாளராக பணியாற்றும் தனது கனவு தற்போதே நனவாகியுள்ளதாக கூறுகிறார். இந்நிலையில் முக்காடு அணிந்தவாறு அவர் தொலைக்காட்சியில் தோன்றுவது குறித்து  இணையத்தளத்தில்  பல்வேறு எதிர்மறை விமர்சனங்கள் வெளியாகிய போதும் தனக்கு ஆதரவளிக்கும் நேயர்களும்  கணிசமாக உள்ளதாகவும் அவர்கள் தன்னை ஊக்கப்படுத்தி வருவதாகவும் தஹெரா தெரிவித்தார்.

அவர்  சிக்காகோவிலுள்ள கத்தோலிக்க  பல்கலைக் கழகமான லொயோலா பல்கலைக்கழகத்தில்  பட்டக் கல்வியை மேற்கொண்டு பட்டம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.