(எம்.எப்.எம்.பஸீர்)

பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயரிஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்டு வந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீள லண்டனுக்கு அனுப்படாது சீனாவில் கட்டளை தளபதிகள் (brigade commander) தொடர்பில் நடாத்தப்படும் இராணுவ பாடநெறி ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இராணுவ தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நேற்று மாலை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால்  மகேஷ் சேனநாயக்கவுக்கும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கும் இடையில் விஷேட சந்திப்பு இடம்பெற்ற நிலையில், இதன்போது இது குறித்த தீர்மானத்தை இராணுவ தளபதி பிரிகேடியரிடம் கூறியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

பிரித்தானியாவின் லண்டன் நகரில், இலங்கை உயரிஸ்தானிகராலயம் முன்பாக கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் செய்த புலம் பெயர் தமிழர்களை நோக்கி  ' கழுத்தறுத்து' கொலை செய்வேன் எனும் அர்த்தத்தை கொடுக்கும் வகையில் சைகளை வெளிப்படுத்தியமை தொடர்பில், உயரிஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தொடர்பில் பலத்த விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

 எனினும்  தான் ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தவில்லை எனவும் இலங்கை பிரபாகரனை கொன்றுவிட்டது என்றே செய்கை ஊடாக கூறியதாகவும் பிரிகேடியர் பிரியங்க விளக்கமளித்திருந்தார்.

 இந் நிலையில் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி பிரிகேடியர் பிரியங்க நாட்டுக்கு மீள அழைக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பினார்.

 இந் நிலையில் 26 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சுக்கு அவர் சென்ற போதும், அங்கு வெளிவிவகார செயலாளரை சந்திக்க வாய்ப்பளிக்கப்படாது இராணுவத் தளபதியை சந்திப்பது போதுமானது என அவருக்கு கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பிரிகேடியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே அவரை நாட்டுக்கு அழைத்ததாக  ஏற்கனவே அறிவித்த இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் மகேஷ் சேனநாயக்க, நேற்று பிரியங்க பெர்னாண்டோவுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார்.

இதன்போது பிரிகேடியர் பிரியங்கவை மீள லண்டனுக்கு அனுப்பாமல் இருப்பது குறித்து இராணுவ தளபதி விளக்கியதாகவும், அதற்கு பதிலாக அவரை சீனாவின் உயர் பாடநெறிக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.