இஸ்ரேல் அரசின் புதிய வரி விதிப்பு பிரச்சனையால் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு கிறிஸ்துவின் உயிர் பிரிந்த இடத்தில் உள்ள பழங்கால தேவாலயம் நேற்று மூடப்பட்டது.

யூதாஸ் என்னும் சீடரால் காட்டிக் கொடுக்கப்பட்ட இயேசு கிறிஸ்து தற்போதைய ஜெருசலேம் நகரில் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். அவரது உயிர் பிரிந்த இந்த இடத்தில் கட்டப்பட்ட சுமார் 2000 ஆண்டுகள் பழமையான தேவாலயம் அமைந்துள்ளது.

இந்த இடத்தில் இருந்துதான் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்து விண்ணுலகிற்கு சென்றதாக நம்பப்படுவதால் இந்த தேவாலயம் கிறிஸ்தவ மக்களின் மிக முக்கியமான புனிதத்தலமாக உள்ளது. ஆண்டுதோறும் உலகின் பல நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் ஜெருசலேமில் உள்ள இந்த தேவாலயத்துக்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இஸ்ரேல் நாட்டு அரசு சமீபத்தில் அறிவித்த புதிய சொத்து வரி மற்றும் வரி விதிப்பு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்று காலை 10 மணியளவில் இந்த வழிப்பாட்டுத்தலம் மூடப்பட்டதாக தேவாலய நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேவாலயம் எவ்வளவு நாட்களுக்கு மூடப்பட்டு இருக்கும்? மீண்டும் எப்போது திறக்கும்? என்பது தொடர்பான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.