சிறுவர் தொடர்பான பாலியல் ஆபாச காட்சிகளை தொகுப்பாக வைத்திருந்ததாகவும், 18 வயது இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாகவும்,  குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் கிறிஸ்துவ பாதிரியாருக்கு சிறை தண்டனை விதித்து பவேரிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடாத்தப்பட்ட நிலையில் 8 1/2, ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பவேரிய நீதிமன்றம் கடந்த வியாழனன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

சமூகத்தில் அவரால் இனி அச்சுறுத்தல் ஏற்படாது என உறுதியான பின்னரே அவரை விடுதலை செய்வது தொடர்பில் முடிவெடுக்கப்படும் எனவும் சிறை தண்டனைக்கு முன்னர் சில ஆண்டுகள் உளவியல் சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் 53 வயதான குறித்த பாதிரியாரை நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பாலியல் தொடர்பான 100 க்கும் மேற்பட்ட வழக்குகள் அவர் மீது தொடரப்பட்ட நிலையில் 108 பிரிவுகளில் வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதேபோல் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை பாலியல் குற்றம் தொடர்பில் சிறை தண்டனை அனுபவித்துள்ளார் என தெரிவிக்கபடுகிறது.

மேலும் போலி ஆவணங்கள் தயாரித்து தேவாலயம் ஒன்றில் பாதிரியாராக பணியாற்றி வந்துள்ளார் எனவும் கடந்த 1990ஆம் ஆண்டு தொடக்கம் ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி மற்றும் போலந்து போன்ற நாடுகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாகவும் நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்துள்ளது.