சவுதி அரேபியாவில் வருமானத்தை  மேம்படுத்த பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

அதன் ஒரு கட்டமாக அங்கு பல்லாண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த சினிமா, இசை, நாடகம் மற்றும் பொழுது போக்கு பூங்கா போன்றவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அங்கு மூடப்பட்டிருந்த சினிமா தியேட்டர்கள், இசை மற்றும் நாடக, நடன அரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ரியாத்தில் நாட்டின் முதல் இசை நடன அரங்கம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

சவுதி அரேபியாவில் பொழுது போக்கு அம்சங்கள் மேம்பாட்டுக்கு 4½ லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 10 ஆண்டுகளுக்கு செலவிடப்படும். பொழுது போக்கு அம்சங்களை மேம்படுத்துவதன் மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். அதன் மூலம் நாட்டின் வருவாய் பெருகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

ரியாத் அருகே அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் அளவுக்கு மிகப்பெரிய பொழுது போக்கு நகரம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பொழுது போக்கு துறையில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.