( எம்.எப்.எம்.பஸீர்)

தனது முன்னாள் காதலியிடம் தன்னை மீண்டும் காதலிக்கக் கோரி, அவரை நிலத்தில் வீழ்த்தி கடுமையாக தாக்கி அவரது தங்கச் சங்கிலியை அபகரித்த விமானப்படை புலனாய்வு வீரரான காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நாரஹேன்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் குடிபோதையில் இருந்த காதலனான விமானப்படையின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த தலைமை சிப்பாயை கைது செய்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

மக்குல்தெனிய, ஊருகஹவலதெனிய பகுதியைச் சேர்ந்த 28 வயதான  விமானப்படை வீரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான யுவதியும் அதே பகுதியைச் சேர்ந்தவர் எனவும் 21 வயதான குறித்த யுவதி நாரஹேன்பிட்டி பகுதியில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றின்  பிரத்தியேக செயலாளராக செயற்பட்டுவருபவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது,

குறித்த விமானப்படை வீரரும் யுவதியும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதாகவும் நான்கு மாதங்களுக்கு முதல் தான் காதலை முறித்துக்கொண்டதாகவும், அதன் பின்னர் குறித்த விமானப்படை வீரர் தொடர்ந்தும் தன் பின்னால் வந்து மீள காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்ததாகவும் குறித்த யுவதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் நேற்று முன் தினம் குறித்த யுவதி வேலை முடிந்து நாரஹேன்பிட்டி, ஜயகொத்த  ஒழுங்கை ஊடாக சென்றுகொண்டிருக்கும் போது, குறித்த விமானப்படை வீரர் குடிபோதையில்  அங்கு சென்றுள்ளார். அந்த யுவதி முன்னிலையில் சென்றுள்ள அவர் தன்னை மீள காதலிக்குமாறு  மன்றாடியுள்ளார். இதன்போது யுவதி அதனை வன்மையாக மறுக்கவே, கோபமடைந்துள்ள விமானப்படை வீரர், அந்த யுவதியை அந்த இடத்திலேயே கீழே வீழ்த்தி கடுமையாக தாக்கியுள்ளார்.

 இந் நிலையில் அந்த ஒழுங்கை ஊடாக சென்ற மக்கள் விடயத்தை பொலிஸாருக்கு அறிவிக்கவே,  நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கயான் பிரசன்னவின் தலைமையில் குழுவினர் ஸ்தலம் சென்று விமானப்படை வீரரை கைது செய்துள்ளனர்.

 இதன்போது குறித்த இளைஞன் தனது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியையும் அபகரித்துவிட்டதாக யுவதி பொலிஸாரிடம் கூறியுள்ளார். இந் நிலையில் விமானப்படை வீரரான இளைஞரை சோதனைச் செய்த பொலிஸார் அவரது காற்சட்டை பைக்குள் இருந்து தங்கச் சங்கிலியையும் மீட்டுள்ளனர்.

 அத்துடன் சந்தேக நபரை  சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தி குடிபோதையில் இருந்தை உறுதி செய்துள்ள பொலிஸார்  அவரை நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

 சம்பவம் தொடர்பில்  நாரஹேன்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.