சுதந்திரக் கிண்ண இருபதுக்கு -20 போட்டிகளில் இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் அசேல குணரத்ன விளையாட மாட்டார் என இலங்கை  கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அண்மையில் பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற கிரிக்கெட் தொடரின்போது அசேலவுக்கு ஏற்பட்ட உபாதை காரணமாக அவர் இந்த சுதந்திரக் கிண்ணத் தொடரில் விளையாடமாட்டார் என இலங்கை கிரிக்கட் நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது. 

அசேல தோள்பட்டையில் ஏற்பட்ட உபாதையால் இத் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்கவும் காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்புக் காரணமாக சுதந்திரக் கிண்ணத் தொடரில் விளையாட மாட்டாரென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் மும்முனை கிரிக்கெட் தொடர் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இத் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.