தலங்கம பொலிஸ் பிரிவின் பட்டபொத்த வீதியின் விமலதிஸ்ஸ மாவத்தையில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி ஒருவரை சுட்டுக்கொன்று அவரது மனைவிக்கு படுகாயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இதுவரை 30 இற்கும் அதிகமானோரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  நுகேகொட பொலிஸ் அத்தியட்சர் பிரிவின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  

இந் நிலையில் இது குறித்து மிரிஹான விஷேட குற்றத்தடுப்புப் பிரிவும் தலங்கம பொலிஸாரும் இணைந்து விசாரித்து வருவதாகவும், உளவுத் துறை தகவல்களின் பிரகாரம் இந்த துப்பாக்கிச் சூடானது அங்கொட லொக்கா எனும் பாதாள உலக தலைவனின் கும்பலால் முன்னெடுக்கப்பட்டதாக சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

இந் நிலையில் சம்பவம் தொடர்பில் பல்வேறு சி.சி.ரி.வி. காணொளிகளை பொலிஸார் பெற்றுள்ளதாகவும் அதனை மையப்படுத்தி தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

 கடந்த 18 ஆம் திகதி ஞாயிறன்று அதிகாலை குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருந்தது. வீட்டுக்குள் அத்து மீறிய துப்பாக்கிதாரிகள் அங்கு உறங்கிக்கொண்டிருந்த கணவன் - மனைவி மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்திருந்தனர். 

இதன்போது 52 வயதான கணவன் உயிரிழந்திருந்ததுடன் அவரது 48 வயதான மனைவி படு காயமடைந்த நிலையில் தொடர்ந்து தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

 இந் நிலையில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில், கடுவலை - தலங்கம பகுதியில் ஆதிக்கம் செலுத்திய பாதாள உலக தலைவன் சமயங் கொல்லப்பட்ட பின்னர் அந்த இடத்தினை ஊறுஜுவா  கைப்பற்றிர்யிருந்தான்.

 ஊறு ஜுவாவின் சாரதியாக செயற்பட்ட எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த இளஞர், இரவு நேர களியாட்ட விடுதியில்  சேவையாற்றும் அத்துருகிரிய பகுதி பெண்ணொருவருடன் அந்த வீட்டிலேயே வாடகைக்கு இருந்து வந்த நிலையில் அவரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் இலக்கு தவறி வீட்டின் உரிமையாளர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாகி இருப்பதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பிட்டலி துஷார கொலை தொடர்பில் ஊறுஜுவ கைதாகி தற்போது விளக்கமறியலில் உள்ள நிலையில், இந்தியாவில் இருந்து அங்கொட லொக்கா, லடியா ஆகிய பாதாள உலக தலைவர்களின் ஆலோசனையின் பிரகாரம் குறித்த துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

ஏனெனில் லடியாவின் சகா ஒருவருக்கும், ஊறு ஜுவாவின் சாரதியான இளைஞருக்கும் இடையில் முன் விரோதம் இருந்தமை தொடர்பில் பொலிஸார் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர். இந் நிலையிலேயே அது தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.

 நுகேகொட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசாத் ரணசிங்க, உதவி பொலிஸ் அத்தியட்சர் - 3 காவிந்த பியசேகர ஆகியோரின் நேரடி கட்டுப்பாடு மற்றும் ஆலோசனைக்கு அமைவாக விசாரணைகள் மிரிஹான குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் தலங்கம பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.