(எம். எம். மின்ஹாஜ், ஆர்.யசி)

பிரதான இரண்டு கட்சிகள் இணைந்த தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசிய அரசாங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் புதன்கிழமை  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையில் இதனைக் குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில், 

தேசிய அரசாங்கம் தொடர்பில் எழுப்பப்பட்டுள்ள சர்ச்சைகளுக்கு அமைய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதுடன் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியினை முன்னெடுத்து செல்ல தீர்மானித்துள்ளோம். 

இந்த அரசாங்கத்தில் இருந்து நாம் நீங்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் தேசிய அரசாங்கம் குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த காரணிகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு  நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகவே அந்த உடன்படிக்கைக்கு அமைய நாம் தொடர்ந்தும் உடன்படுகின்றோம். தொடர்ந்து தேசிய அரசாங்கமாக நாம் செயற்படுவோம். இன்னும் நாம் தேசிய அரசாங்கத்தில் இருந்து நீங்கவில்லை என கூறினார்.