(எம்.எம். மின்ஹாஜ், ஆர்.யசி)

தேசிய அரசாங்கம் தொடரவேண்டும் என்றால் மீண்டும் பாராளுமன்றத்தின் அனுமதியினை பெறவேண்டும். வாய் வார்த்தைகளின் மூலம் தேசிய அரசாங்கத்தை நீடிக்காது உடன்படிக்கை என்னவென்பது வெளிப்படுத்தப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும்  எதிர்க்கட்சி  பிரதம கொறடாவுமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். 

தேசிய அரசாங்க கால எல்லை மீறியுள்ள நிலையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தில் தொடர்ந்தும் நீட்டித்துக் கொண்டுசெல்ல முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் புதன்கிழமை ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

தேசிய அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு  மாத்திரம் செயற்படும்  என பிரேரணையில் இல்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். 

இந்த பிரேரணையில் அமைச்சர்களின் எண்ணிக்கை  அதிகரிப்பு தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த பிரேரணையினை சாதாரணமாக முன்வைக்க முடியாது. 

இதற்கு இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட வேண்டும். ஆகவே இந்த பிரேரணையை முன்வைக்க முன்னர் இணக்கப்பாடு ஒன்றினை எட்டவேண்டிய தேவை உள்ளது. தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்ட பின்னரே இவ்வாறான பிரேரணை ஒன்றினை முன்வைக்க  முடியும். 

ஆகவே தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அன்று பாராளுமன்றத்தில் நீங்கள் தெரிவித்தீர்கள். அதற்கு அமையவே அமைச்சரவை அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற இந்த பிரேரணையையும் நீங்கள் முன்வைத்துள்ளீர்கள். ஆகவே தேசிய அரசாங்கதின் கால எல்லை வரையில்  இந்த பிரேரணை செயற்படவேண்டும். தேசிய அரசாங்கத்தின் கால எல்லை முடிவடையும் நிலையில் இந்த பிரேரணையும் நிராகரிக்கப்பட்டுவிடும். அப்படியாயின் தேசிய அரசாங்கம்  குறித்து செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை என்ன. அந்த உடன்படிக்கை என்னவென்பதையே நாம் கேட்கின்றோம். 

 ஆகவே அடுத்த கால கட்டத்திற்கான தேசிய அரசாங்கம் முன்னெடுத்து செல்லும் உடன்படிகளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதேபோல் அமைச்சரவையினை அதிகரிப்பது குறித்து மீண்டும் பாரளுமன்றத்தில் அனுமதியினை பெற வேண்டும். ஆகவே அரசியலமைப்புக்கு முரணான வகையில் இனியும் அமைச்சரவை செயற்பட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.