பாடசாலைக்கு செல்லும் எம்முடைய பிள்ளைகள் மாலையில் டியூசன் வகுப்பிற்கு சென்றோ அல்லது வீட்டிலோ வீட்டுப்பாடத்தைச் செய்வதைக் கண்காணித்திருப்போம். தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் சித்தியெய்துவார் என்று எதிர்பார்த்திருந்தால்.... எதிர்மறையான விடைகளே கிடைத்திருக்கும். உடனே பெற்றோர்களின் கோபம் தங்களுடைய பிள்ளைகளின் மீது திரும்பும். அத்துடன் ஆசிரியர்கள் வேறு பிள்ளைகளுடன் ஒப்பிட்டு பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கவேண்டியதிருக்கும்.

எம்முடைய பிள்ளைகள் நன்றாக படித்திருப்பார். ஆனால் தேர்வு சமயத்தில் அவனுடைய கவனத்திற்கு விடைகள் முழுமையாக தொடர்ச்சியாக தெரியாமல் போயிருக்கலாம். இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கவேண்டும். தற்போது இதனை தவிர்க்க சிறார்களுக்கான உளவியல் நிபுணர்கள் ஜர்னலிங் என்ற விடயத்தைப் பற்றி பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் அறிமுகப்படுத்துகிறார்கள்.

ஜர்னலிங் என்றால் மாணவர்கள் தங்களின் உணர்வுகளை பகிர்ந்துகொள்வது. உணர்வுகளை எழுத எழுத பதட்டத்திலிருந்து விடுபடுவதை உணர இயலும். பெரும்பாலான மாணவர்கள் தங்களுக்கு தெரிந்த விடையையே பதட்டத்தின் காரணமாகவே தேர்வின் போது எழுதுவதில்லை. இதற்கு ஜர்னலிங் முறையிலான பயிற்சியே சிறந்தது.

உதாரணத்திற்கு, ‘நான் நன்றாக படித்தேன்... ஆனால்..’ என்றோ, ‘நான் நன்றாக செய்ய இதனையெல்லாம்.....’ என்றோ எழுதத் தொடங்கலாம். இத்தகைய பயிற்சியின் மூலம் மாணவர்களின் மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மறையத் தொடங்கும். தேர்வை பதட்டமின்றி எழுதி, அதிக மதிப்பெண் எடுத்து சித்தியெய்த இயலும்.

டொக்டர் ராஜ்மோகன்.