உள்ளூராட்சி மன்றங்களுக்கு வெற்றிபெற்ற கட்சிகளின் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும்போது 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தைப் புறந்தள்ளிவிட்டு செயற்பட முற்பட்டால் கடுமையான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என மார்ச் 12 அமைப்பு எச்சரித்துள்ளது. 

உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளன. இந்நிலையில் இன்று (20) கொழும்பு சனசமூக மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவ்வமைப்பு மேற்கண்டவாறு குறிப்பிட்டது. 

மார்ச் 12 அமைப்பின் பேச்சாளர் மஞ்சுல கஜநாயக்க உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:

“340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வது தொடர்பான கலந்துரையாடல்கள் சகல கட்சிகளிலும் இடம்பெற்று வருகின்றன. ஆனால் கட்சிகள் தெரிவு செய்யும் தலைவர்கள் சரியான பாதையில் சிந்திப்பவர்களா என்பதை கட்சிகள் சிந்திக்க வேண்டும். 

“இத்தேர்தலில் பிரதான அம்சம் பெண்களுக்கான அரசியல் உரிமையை பெற்றுத்தருவதே! 25 வீத பெண் பிரதிநிதிகளை உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்வது கட்டாயப் படுத்தப்பட்டது. ஆனால் அதில் கட்சிகள் கவனம் செலுத்தவில்லை. 

“மேலும் தேர்தல் முறை தொடர்பாக தேர்தலுக்கு முன்னர் விமர்சிக்காத சிலர் தற்பேது தேர்தல் முறைமை தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால் இத்தேர்தல் முறையே மக்களுக்கான சிறந்த தலைவர்களைப் பெற்றுத் தந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.