மேற்கு வங்கத்தில் அதி கொடூரமான பாலியல் வல்லுறவுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குஷ்மந்தி என்ற கிராமத்தில் இரவு நேரத்தில், மன நலம் குன்றிய காட்டுவாசி இளம் பெண் ஒருவர் திரிந்துகொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த அடையாளம் தெரியாத சிலர் அப்பெண்ணை ஒதுக்குப் புறமான இடத்துக்குத் தூக்கிச் சென்றனர்.

அங்கு வைத்து அப்பெண்ணை மாறி மாறி வல்லுறவுக்கு உட்படுத்திய அவர்கள், கடைசியில் இரும்புக் கம்பி ஒன்றை அவரது மர்ம உறுப்புக்குள் செலுத்தியுள்ளனர்.

வலியால் துடித்த அப்பெண்ணின் அவலக் குரல் கேட்டு கிராம மக்கள் சிலர் ஓடிவரவே, வல்லுறவுக்கு உட்படுத்தியவர்கள் தப்பிச் சென்றனர்.

மோசமான நிலையில் இருந்த அப்பெண்ணை கிராம மக்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.

அரை மயக்க நிலையில் இருக்கும் அப்பெண்ணின் உடலைப் பிளந்து காயங்களின் தன்மையை ஆராய்ந்த பின் சத்திர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, அப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும் குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் அப்பகுதி மக்கள் பொலிஸ் நிலையத்தின் முன் போராட்டம் நடத்தினர்.

சந்தேகநபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.