பொலிஸ் நிலையத்தினுள் பலவந்தமாகப் புகுந்த கும்பல், அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களை வெளியே இழுத்து வந்து அடித்தே கொன்ற சம்பவம் அருணாச்சலப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

நம்கோ என்ற கிராமத்தில் வசித்து வந்த ஐந்து வயதுச் சிறுமி கடந்த 12ஆம் திகதி காணாமல் போனார். வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது சடலம் கடந்த ஞாயிறன்று தேயிலைத் தோட்டம் ஒன்றில் இருந்து கைப்பற்றப்பட்டது.

இந்தக் கொலையைச் செய்த சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தெஸு பொலிஸ் நிலையத்தில் மறித்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், திடீரென்று அங்கு வந்த கும்பல் ஒன்று பொலிஸ் உத்தியோகத்தர்களின் எதிர்ப்பையும் மீறி பொலிஸ் நிலையத்தினுள் நுழைந்தது.

அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவரையும் வெளியே இழுத்து வந்த அந்த கும்பல், இருவர் மீதும் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தத் தொடங்கியது.

கும்பலின் ஆக்ரோஷத்தைக் கண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

இதற்கிடையில், இருவரையும் நிர்வாணப்படுத்திய கும்பல், அவர்களை வீதியில் இழுத்துச் சென்றதில் மேலும் பலர் தாக்கத் தொடங்கினர்.

தாக்குதலைத் தாங்க முடியாத இருவரும் நடுவீதியிலேயே உயிரை விட்டனர்.

இதையடுத்து பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மூவர் இடை நீக்கம் செய்யப்பட்டதோடு, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.