ஆற்றலும் ஆளுமையும் கொண்ட இந்துத் தமிழன் இவ்வுலக வாழ்வை நிறைவு செய்துகொண்டு இறைவன் திருவடியில் அமைதியடைந்து விட்டார். ஆம். பல்துறை ஆற்றலும், ஆளுமையும் கொண்ட அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் நீலகண்டன் தனது எழுபத்தோராவது அகவையில் அமரத்துவம் அடைந்து விட்டார். பிறப்புண்டு, வாழ்வுண்டு, இறப்பும் உண்டு என்ற இயற்கை நியதிக்கொப்ப 1947ஆம் ஆண்டு நான்காம் மாதம் பதினாறாம் திகதியன்று வடஇலங்கை வடமராட்சியின் உடுப்பிட்டியில் கந்தையா தம்பதியினரின் மகனாகப்பிறந்த அன்னார், தமது ஆரம்பக்கல்வியை உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் உயர் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கற்று இலங்கை சட்டக்கல்லூரியில் பயின்று 1969 இல் சட்டத்தரணியாக வெளியேறினார். 

பாடசாலைக்காலத்திலேயே தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்திய அன்னார் கொழும்பில் தனது தொழிலை மேற்கொண்ட காலம் முதல் இறக்கும் நாள் வரை சமயப்பணி, கல்விப்பணி, சமூகப்பணியென்று பல்வேறு சமூகநலப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஆம். இறப்பை எதிர்கொண்ட 2018.02.18 ஆம் நாளில் சில மணிநேரத்திற்கு முன்பும் சமய நிகழ்வொன்றின் ஒழுங்குகளை நேரில் சென்று மேற்பார்வை செய்தமை அவரின் செயலுறுதியை வெளிப்படுத்துகிறது. 

ஆரம்பத்தில் அனைத்திலங்கை இந்து வாலிப சங்கப் பேராளராக அகில இலங்கை இந்து மாமன்றத்தில் இடம்பெற்ற அவர், மாமன்றத்தின் துணைச் செயலாளராகவும், பொதுச் செயலாளராகவும், தலைவராகவும் பல்லாண்டுகள் திறமையுடன் பணியாற்றினார். கொழும்பு விவேகானந்தசபை, திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச்சபை, உட்பட பல இந்து சமய நிறுவனங்களில் பல பொறுப்புகளை வகித்துள்ளார். கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். 

அமரர் வைத்திய கலாநிதி க.வேலாயுதபிள்ளையுடன் இணைந்து மூடிக்கிடந்த கொழும்பு இரத்மலானை இந்துக்கல்லூரியை மீண்டும் இயங்க செயற்பட்டவர்களில் கந்தையா நீலகண்டனும் முக்கிய இடம்பெறுகிறார். அத்துடன் இரத்மலானை இந்துக் கல்லூரியின் மாணவ, மாணவியரின் எண்ணிக்கைப் பெருக்கத்தையும் வசதியற்ற பிள்ளைகளின் நலனையும் நோக்காகக்கொண்டு இலவச தங்குமிடம் மற்றும் உணவு உட்பட வசதிகளுடன் கூடிய மாணவ விடுதிகளை நிறுவவும் உழைத்தார். பல ஆண்டுகளாகப் பல நூறு தமிழ்ப் பிள்ளைகள் குறித்த விடுதியான, சக்தி இல்லத்தில் தங்கி பயின்று பயன்பெற்றுள்ளனர்.  

காணி கிடைத்தும் பல்லாண்டுகாலமாக கட்டடம் அமைப்பதில் பின்னடைவு, கண்டிருந்த அகில இலங்கை இந்து மாமன்றத் தலைமைப் பணிமனையை அதன் முன்னாள் தலைவர்களான அமரர் க.பாலசுப்பிரமணியம் மற்றும் அமரர் வி.கயிலாசப்பிள்ளை உட்பட பலருடன் இணைந்து நிறுவுவதில் வெற்றிகண்டவர் கந்தையா நீலகண்டன். இவரது காலத்தில் யாழ்ப்பாண நல்லூரில் மாமன்றக் கிளை அலுவலகம் நிறுவப்பட்டமையும் முறிகண்டியில் சரவணப் பொய்கை என்ற பெயரில் கட்டடம் நிறுவப்படுவதும் அதேபோல் நாட்டின் பல பகுதிகளில் மாமன்ற செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதும் அவரது ஆற்றல்மிகு வழிகாட்டலென்பது குறிப்பிடத்தக்கது.  

கல்விப் பணியைப் பொறுத்தவரை மாமன்ற கல்விக் குழுவின் செயற்பாடுகளுக்கு ஊக்கமும் உந்துதலும் தந்தவர் நீலகண்டனே என்பதை அதன் செயலாளராக செயற்பட்டு வந்தவர் என்ற முறையில் உறுதியாகக் கூறமுடிகிறது. இன்று நாடு முழுவதுமாக இந்துப்பிள்ளைகளுக்கு உதவிக்கரம் நீட்டி அவர்களது சமய அறிவை மேம்படுத்த நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பயிலரங்குகள், செயலமர்வுகள் என்று நடத்தி பல்லாயிரம் மாணவ மாணவியர்களுக்கு கற்பித்தல் செயற்பாடுகளை நடத்திவருகிறோம். எதிர்வரும் காலங்களில் அனைத்துப்பாடங்களுக்கும் இது போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளோம். 

இவ்வாறாக கல்விப் பணிகளைத் தளராது மேற்கொள்ள ஊக்கமும் உதவியும் ஒத்துழைப்பும் மாமன்றத் தலைவர் என்ற வகையில் நீலகண்டன் தயங்காது வழங்கினார். நாட்டின்  கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பிலும் அதே பரீட்சையிலும் இந்து நாகரிகம் ஒரு பாடமாக இருந்த போதிலும் அதற்கான பாடநூல் ஒன்று இருக்காமை ஒரு குறையாகவிருந்துவந்தது. அக்குறையை நீக்க பாடத்திட்டத்தோடு இணைந்த பாடநூலொன்றைத் தயாரித்து வெளியிட எமக்கு பலவழிகளிலும் நீலகண்டன் உதவினார். இதற்கு இந்து மாணவ சமுதாயம் என்றும் நன்றியுடையதாயிருக்கும். 

மலையகத்தின் ஊவா “மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் தமிழ்மொழி மூலம் உயர்தர வகுப்புகளில் கணித, விஞ்ஞானப் பிரிவுகள் இன்மையால் அவர்கள் பல ஆண்டுகளாக நுவரெலியா மாவட்டத் தமிழ் பாடசாலைகளில் இணைந்து கற்றுவந்தனர். திடீரென நுவரெலியா மாவட்ட அரசியல்வாதிகளால் அவ்வாறு பயின்ற மாணவ, மாணவியர் இடைநடுவில் வெளியேற்றப்பட்டு அவதிக்குள்ளாக்கப்பட்டனர். இந்நிலையிலேயே இது தொடர்பில் மாமன்ற கல்விக் குழுவுடன் கலந்துரையாடிய மாமன்றத் தலைவர் சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வகை செய்ததால் குறித்த பாதிக்கப்பட்ட 106 தமிழ் மாணவ மாணவியர் மீண்டும் நுவரெலியா மாவட்டப் பாடசாலைகளில் இணைந்து கல்வியைத் தொடர வழியேற்பட்டது.

இந்து மாமன்றத்தால் பல வெளியீடுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆண்டு மலர்கள், நினைவு மலர்கள் என பலவுள்ளன. இந்து ஒளி என்ற காலாண்டு சஞ்சிகை இரண்டு தசாப்தங்களைக் தாண்டி வெளிவந்து கொண்டிருக்கிறது. இவற்றிற்கெல்லாம் ஆணிவேராகவிருந்து ஆலோசனைகளையும் வழங்கி செயற்பட்டவர் நமது தலைவரே… 

நல்லவர்களையும் அல்லாதவர்களையும் அணைத்துச் செல்லும் சாணக்கியராக செயற்பட்ட நீலகண்டன் தமிழர் அரசியலிலும் நாட்டம் கொண்டவராக செயற்பட்டார். இவ்வாறு பல்வேறு துறைகளில் ஈடுபட்ட அன்னார் சட்டத்துறையிலும் முத்திரைபதிக்கத் தவறவில்லை. கந்தையா நீலகண்டனின் மறைவு நமது சமூகத்திற்கு பெரும் இழப்பாகவிருப்பினும் இயற்கை நியதியை யாரால் வெல்லமுடியும். அன்னாரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம். 

த.மனோகரன் 

துணைத்தலைவர் 

அகில இலங்கை இந்து மாமன்றம்