விகாரையொன்றில் திருடிய 3 மாணவர்களை பூஜாபிட்டிய பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கண்டி  பூஜாபிட்டிய பிரதேசத்திலுள்ள பழைமை வாய்ந்த விஹாரை ஒன்றில் இருந்த நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்றை திருடிச்சென்ற பிரபல பாட சாலை ஒன்றில்  உயர்தர வகுப்பில் கல்விகற்கும் மாணவர்கள் மூவரையே பூஜாபிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரோந்து நடவடிக்கையில் ஈடு பட்டிருந்த பொலிஸார்  அதி காலையில் சந்தேகத்திற்கிடமாக நின்ற மாணவர்களை  கண்டு அவர்களை  விசாரித்த போது  அவர்களிடம் நீர் இறைக்கும்  இயந்திரம் ஒன்று  இருப்பதை கண்டுள்ளனர்.  

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை  நடாத்திய பொலிஸார்  இவ் இயந்திரம் அப் பிரதேசத்திலுள்ள  பழைமை வாய்ந்தவிஹாரை  ஒன்றில் இருந்து திருடப்பட்டதாக தெரிய வந்துள்ளது.  அதன் பின் இதனை திருடியதாக சந்தேகிக்கப்படும் மூன்று மாணவர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களுள் இருவர் கண்டியில் பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில்  கல்வி கற்பதாகவும்  மற்றவர் அண்மையில் பரீட்சை எழுதிவிட்டு  பாடசாலையை விட்டுவிலகியுள்ளவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் கண்டி  நீதிவான் முன் ஆஜர் செய்ய உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பூஜாபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.