( இராஜதுரை ஹஷான்)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை பிரதமராக்கி ஆட்சியை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆலோசனை வழங்கியுள்ள முருதெட்டுவே ஆனந்த தேரர் , தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி தீர்வு காணாமல் வெறுமனே பெயரளவில் ஜனாதிபதி அதிகாரத்தில் இருப்பது வேடிக்கையாக உள்ளது எனவும் குறிப்பிட்டார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிறைவேற்று  அதிகாரத்தினை பயன்படுத்தாமல் வெறும் நாம நிர்வாகியாகவே செயற்படுகின்றமை கண்டிக்கத்தக்கது. நாட்டின் அரசியல்  நெருக்கடி தொடர்பில் உடனடி தீர்மானத்தினை ஜனாதிபதி மேற்கொள்ளாவிட்டால் மக்களை ஒன்றுத்திரட்டி பாரிய போராட்டத்தினை நல்லாட்சிக்கு எதிராக மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, பிரதமர் பதவி விலகினால்  நாட்டின் அனைத்து பிரச்சினைகளும் சுமுகமான முறையில் நிறைவு பெறும். பிரதமர் தனது அரசியல் இருப்பினை தக்க வைத்துக்கொள்ளுவதற்காகவே 19 ஆவது திருத்தத்தினை உருவாக்கினார்.

நாட்டின் யதார்த்த நிலையினை உணர்ந்து  பிரதமர் தாமாகவே பதவி விலக வேண்டும். ஜனாதிபதியின் பொறுப்பற்ற தன்மையே நாட்டில் தற்போது தோன்றியுள்ள பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக காணப்படுகின்றதென அவர் மேலும் தெரிவித்தார்.

அபயராம விகாரையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.