ஈராக் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த 9 பெண்களுக்கு ஆயுள் தண்டனையும் துருக்கி நாட்டை சேர்ந்த பெண்ணுக்கு மரண தண்டனையும் விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சிரியா மற்றும் ஈராக் நாட்டில் ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் சேர்ந்து தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தனர். இருநாடுகளிலும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான அரசுப் படைகளின் தாக்குதல் பெருமளவில் வெற்றி அடைந்துள்ளது.

ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் உயிர் பயத்தில் தப்பி ஓடி விட்டனர். மேலும் சிலர் அரசுப் படையினரிடம் சரண் அடைந்துள்ளனர். சரண் அடைந்தவர்களுக்கு எதிராக சிரியா மற்றும் ஈராக் நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் தீவிரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த 9 பெண்களுக்கு ஆயுள் தண்டனையும், துருக்கி நாட்டை சேர்ந்த மற்றொரு பெண்ணை தூக்கிலிட்டு கொல்லுமாறு மரண தண்டனையும் விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக ஈராக் தீவிரவாத தடுப்பு நீதிமன்ற செய்தி தொடர்பாளர் அப்துல் சத்தார் அல் பிர்க்தார் குறிப்பிட்டுள்ளார்.