விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் - தமன்னா நடிப்பில் வெளியான ‘ஸ்கெட்ச்’ திரைப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.

விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ஸ்கெட்ச்’. விஜய் சந்தர் இயக்கிய இப்படத்தில் தமன்னா, விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதிரடி ஆக்‌ஷன் படமாக தயாரான இப்படம் ஜனவரி மாதம் பொங்கல் திரு நாளன்று வெளியானது.

இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. வரும் பிப்ரவரி 23ம் திகதி தெலுங்கில் ஸ்கெட்ச் போட இருக்கிறார் விக்ரம்.

தமிழ் ரசிகர்களை கவர்ந்தது போன்று, தெலுங்கு ரசிகர்களையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்கெட்ச் படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி.கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரித்துள்ளது. விக்ரம், தமன்னாவுடன் இப்படத்தில், ஸ்ரீ பிரியங்கா, சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள் தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். தமன் இசையமைத்திருக்கிறார்.