மெக்ஸிக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் சேதங்களைப் பார்வையிடச் சென்ற ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியதில் பதினான்கு பேர் பலியாகினர்.

மெக்ஸிக்கோவின் ஓக்ஸாக்கா நகரை மையப் புள்ளியாகக் கொண்டு 7.2 ரிக்டர் அளவுடைய பாரிய நிலநடுக்கம் நேற்று முன்தினம் (16) ஏற்பட்டது. இதில் எவரும் பலியாகவில்லை எனினும் சேதங்கள் ஏற்பட்டன.

சேதங்களைப் பார்வையிடுவதற்காக அந்த நாட்டின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஆளுனர் ஒருவரும் ஏனைய அதிகாரிகள் சிலருடன் ஹெலிகொப்டரில் பயணமாயினர்.

கடும் சேதத்துக்குள்ளான ஒரு கிராமப் பகுதியில் தரையிறக்கும்போது ஹெலிகொப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிலரை ஏற்றிச் சென்ற வாகனங்கள் மீது ஹெலிகொப்டர் வேகமாக விழுந்து நொறுங்கியது.

இதில், நிலநடுக்கத்தில் உயிர் தப்பிய ஒரு குழந்தை உட்பட பதினான்கு பேர் பலியாகினர்.

ஹெலிகொப்டரில் பயணித்தவர்கள் சிலர் காயங்களுடன் உயிர் தப்பினர்.