ஃப்ளோரிடாவின் பாடசாலை ஒன்றில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதல் குறித்து, அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிக்கலஸ் க்ரூஸ் (19) என்ற அந்த இளைஞர், கடந்த ஆண்டு தனது ‘யூட்யூப்’ கணக்கில் தான் துப்பாக்கியுடன் இருந்த காட்சியைத் தரவேற்றியிருந்ததுடன், “தொழில்முறை பாடசாலைத் தாக்குதல்தாரி” என்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இதை அவதானித்த ஒருவர், அது பற்றி அமெரிக்க பாதுகாப்புத் துறைக்குத் தெரிவித்திருந்தார். எனினும், அது குறித்த முழு விபரத்தையும் பெற முடியாமல் போனதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த பாடசாலையின் முன்னாள் மாணவரான க்ரூஸை, பாடசாலை வளாகத்தினுள் பையுடன் வருவதை பாடசாலை நிர்வாகம் தடை செய்திருந்தது. இதற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அவரது நடத்தை குறித்து அவதானத்துடன் இருக்குமாறு ஆசிரியர்களுக்கு பாடசாலை நிர்வாகம் மின்னஞ்சல் மூலம் அறிவித்திருந்தது.

தனது மாணவப் பருவத்தில் பல முறை க்ரூஸ் துப்பாக்கி குண்டுகளுடன் பாடசாலை வந்திருந்ததாகவும் இத்தாக்குதல் சம்பவத்தை க்ரூஸ் நடத்தியது தனக்கு எந்த ஆச்சரியத்தையும் தரவில்லை என்று சக மாணவர் ஒருவர் கூறியுள்ளார்.

இதே கருத்தைப் பல மாணவர்களும் தெரிவித்துள்ளனர்.

ஆக, க்ரூஸின் நடவடிக்கை குறித்து ஏற்கனவே சந்தேகங்கள் எழுந்த நிலையில், பொறுப்பானவர்கள் அது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காததாலேயே பதினேழு உயிர்கள் பரிதாபகரமாகப் பறிக்கப்பட்டதாகப் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.