தென்னாபிரிக்காவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆறாவதும் கடைசியுமான ஒரு நாள் போட்டியில் இந்தியா எட்டு விக்கட்டுகளால் வெற்றிபெற்றது. அணித் தலைவர் விராட் கோலி அபாரமாக விளையாடி, 96 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஆட்டமிழக்காமல் 129 ஓட்டங்களைப் பெற்று இந்தியாவை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கோலி தென்னாபிரிக்காவை துடுப்பாடப் பணித்தார். அதன்படி களமிறங்கிய தென்னாபிரிக்கா 47 ஓவர்களுக்குள் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 204 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

அவ்வணி சார்பில் அதிகபட்சமாக காயா ஸோண்டோ 54 ஓட்டங்களைப் பெற்றார். ஏனையோர் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

பந்துவீச்சில் இந்தியாவின் ஷர்துல் தாக்கூர் 52 ஓட்டங்களுக்கு 4 விக்கட்களைப் பறித்தார். 

அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா ஆகியோர் முறையே 18 மற்றும் 15 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, இரண்டாவது ஆட்டக்காரராகக் களமிறங்கிய கோலி, தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களைச் சிதறடித்தார்.

களத்தில் நின்று ‘வான’ வேடிக்கை காட்டிய கோலி 19 பௌண்டரிகள் 2 சிக்ஸர்கள் சகிதமாக 96 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 129 ஓட்டங்களைப் பெற்றார்.

இது இந்தத் தொடரில் மட்டும் அவர் பெற்ற மூன்றாவது சதமாகும். மேற்படி இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போட்டித் தொடரொன்றில் அதிகபட்ச ஓட்டங்களைக் குவித்த வீரர் என்ற பெருமையையும் கோலி பெற்றார். இந்த ஒரு நாள் தொடரில் மட்டும் அவர் மொத்தமாக 558 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

மேலும் ஒருநாள் (9588), டெஸ்ட் (5142) மற்றும் இ20 (1956) என சர்வதேசப் போட்டிகளில் 17 ஆயிரம் ஓட்டங்களையும் அவர் கடந்தார்.

போட்டி முடிவின் பின் பேசிய கோலி, தான் இன்னும் எட்டு அல்லது ஒன்பது வருடங்கள் விளையாட வாய்ப்புள்ளதாகவும் இறைவன் தனக்குத் தந்திருக்கும் திறமையை மேலும் கடுமையாக முயற்சி செய்து மெருகேற்றி சிறந்த ஆட்டத் திறனை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்திய அணியின் வீரராகவும் அதன் தலைவராகவும் விளையாடுவது தனக்குப் பெருமிதமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.